திருச்சியில் குடிநீர் வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம் : பொதுமக்களுடன் திமுகவினர் இணைந்தனர்!!

2 February 2021, 1:36 pm
DMK Protest - Updatenews360
Quick Share

திருச்சி : பேரூராட்சி அலுவலகம் முன்பு குடிநீர் வழங்க கோரி திமுகவினரும் பொதுமக்களும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருச்சி மாவட்டம், முசிறி தாலுகா தா.பேட்டை  பேரூராட்சியில் வசிக்கும் பொதுமக்களுக்கு அய்யம்பாளையத்தில் இருந்து காவிரி கூட்டு குடிநீர் திட்டம் மூலம்   குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
10 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் விநியோகம் செய்வதாகவும், குடிநீர் தட்டுப்பாட்டை போக்கிட பேரூராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

திமுக நகர செயலாளர் தங்கராசு, பொதுக்குழு உறுப்பினர் ஆப்பிள் கணேசன், மாவட்ட துணை செயலாளர் மயில்வாகனன் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேரூராட்சிக்கு உட்பட்ட பொது மக்கள் காலி குடங்களுடன் திரளாக கலந்து கொண்டனர்.

அப்போது தா.பேட்டை பேரூராட்சியில் வசிக்கும் பொதுமக்களுக்கு தட்டுப்பாடற்ற வகையில் காவிரி குடிநீர் வழங்க வேண்டும், முறையாக சுத்தம் செய்யப்படாமல் இருக்கும் சாக்கடைகளை சுத்தம் செய்து சுகாதார பணிகளை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி பொதுமக்களும் திமுகவினரும் கண்டன கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் .

பின்னர் செயல் அலுவலர் அசோகன் அவர்களிடம் கோரிக்கை மனு அளித்தனர். பொதுமக்களின் கோரிக்கை மீது விரைந்து நடவடிக்கை எடுக்காத நிலையில் மீண்டும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என பொதுமக்கள் எச்சரித்துள்ளனர் பேரூராட்சி அலுவலகம் முன்பு பொதுமக்களின் போராட்டம் காரணமாக அப்பகுதியில் சற்று நேரம் பரபரப்பு நிலவியது. தா.பேட்டை போலீசார் அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Views: - 0

0

0