பள்ளி மாணவர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கல்

14 September 2020, 9:20 pm
Quick Share

தருமபுரி: தருமபுரியில் குடற்புழு நீக்க வாரத்தைகொட்டி குடற்புழு நீக்க மாத்திரைகளை மாவட்ட ஆட்சியர் மலர்விழி வழங்கினார்.

தேசிய குடற்புழு நீக்க நாள் ஆண்டுதோறும் பிப்ரவரி 10-ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. அன்றைய தினத்தில் நாடு முழுவதிலும் 19 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் சிறாருக்கு அல்பெண்டசோல் எனப்படும் குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்படுவது வழக்கம். அதன்படி, தமிழகத்தில் அங்கன்வாடி மையங்கள், அரசு பள்ளிகள், அரசுசார் மற்றும் தனியார் பள்ளிகள், கல்லூரிகள் ஆகியவற்றில் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு மாத்திரைகளை விநியோகிக்கப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் இன்று தருமபுரியில் குடற் புழு நீக்கம் முகாம் நடைபெற்றது.

இந்த முகாமில் மாவட்ட ஆட்சியர் மலர்விழி கலந்துகொண்டு குடற்புழு நீக்க மாத்திரைகளை சிறார்களுக்கு வழங்கினார். அப்போது பள்ளி மாணவர்களிடம் அவர் பேசும் போது. சுகாதாரமற்ற பழக்கவழக்கங்களைக் கடைப்பிடிப்பதும், அசுத்தமான உணவுகளை உண்பதும், திறந்தவெளியில் மலம் கழிப்பதும் குடற்புழுக்கள் உருவாகக் காரணமாக அமைகின்றன. இதனால் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு, பசியின்மை, ரத்த சோகை, வயிற்று உபாதைகள், சோர்வு நிலை உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்படுகின்றன.

அதைத் தடுக்கும் பொருட்டே மத்திய, மாநில அரசுகள் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகின்றன. அல்பெண்டசோல் மாத்திரைகளை உட்கொள்வதன் மூலம் ரத்த சோகை பிரச்னை வராமல் காக்க முடியும் என்றும், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர். அதுமட்டுமன்றி, குழந்தைகளின் அறிவுத் திறன் மற்றும் உடல் வளர்ச்சிக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் பெரிதும் உதவுகின்றன என்று கூறினார்.