திருமணமான அடுத்த நாள் பிணமாக கிடந்த புதுமாப்பிள்ளை: பெண் வீட்டாருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

24 August 2020, 8:17 pm
Quick Share

தருமபுரி: பாப்பிரெட்டிப்பட்டி வாணியாறு அணையில் திருமணமான புது மாப்பிள்ளை சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டி அருகே உள்ள மாரியம்பட்டி கிராமத்தை சேர்ந்த சக்தி என்ற பட்டதாரி இளைஞருக்கும் பொம்மிடி அடுத்த பண்டாரசெட்டிப்பட்டி பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் நேற்று திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்ததை அடுத்து மணப்பெண் வீட்டில் தங்கியிருந்த இவர் இன்று காலை வாக்கிங் சென்று வருவதாக கூறி பண்டாரசெட்டிப்பட்டியில் இருந்து ஆட்டோ மூலம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள வாணியாறு நீர்த்தேக்க அணைக்கு சென்றுள்ளார். வாக்கிங் சென்றுவிட்டு வருவதாக சென்ற இவர் நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பாததால் பதற்றமடைந்த பெண்வீட்டார் சக்தியின் உறவினர்களுக்கு தகவல் அளித்து அக்கம்பக்கத்திலும் விசாரித்துள்ளனர்.

அப்போது ஆட்டோ ஓட்டுனர் ஒருவர் கொடுத்த தகவலின் பேரில் சக்தி உறவினர்களுக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு வாணியாறு அணையில் சக்தி இருப்பதாகவும், உடனடியாக அணைக்கு சென்று பார்க்க வேண்டுமென சந்தேகத்தின் அடிப்படையில் தெரிவித்தனர். வாணியாறு நீர்தேக்க அணைக்கு சென்ற சக்தியின் உறவினர்கள் அணையின் கரையோரத்தில் சக்தி அணிந்திருந்த கைலி, கடிகாரம் செல்போன் ஆகிய பொருட்கள் இருந்ததாக சந்தேகத்தின் அடிப்படையில் காவல் துறைக்கும் தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்ததன் பேரில் தீயணைப்பு மீட்புப் பணி காவலர்கள் சென்று சக்தியின் உடலை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

சுமார் ஒரு மணி நேரத்திற்கு பின்பு சக்தியின் உடல் சடலமாக கண்டெடுக்கப்பட்டு பாப்பிரெட்டிப்பட்டி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் குறித்து கொலையா தற்கொலையா என்ற கோணத்தில் பாப்பிரெட்டிப்பட்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.