வீட்டின் மேற்கூரை மீது சாய்ந்து விழுந்த புளிய மரம்: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய கை குழந்தையுடன் 4 பேர்

Author: Udayaraman
3 August 2021, 8:28 pm
Quick Share

தருமபுரி: மொரப்பூரில் வீட்டின் மேற்கூரை மீது புளிய மரம் சாய்ந்து விழுந்ததில் கை குழந்தையுடன் 4 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

தருமபுரி மாவட்டம் மொரப்பூர் அடுத்த ராசலாம்பட்டியை சேர்ந்த சங்கர் அவரது மனைவி ஜெயசுதா மூன்று குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் சங்கரின் வீட்டின் அருகே புளியமரம் இரண்டு கிளைகளாக பிரிந்த நிலையில் இருந்துள்ளது. சுமார் 50 ஆண்டுகால புளியமரம் என்பதால் பலம் இல்லாமல் மழை மற்றும் காற்று அடிக்கும் காலங்களில் வளைந்து கீழே விழுகின்ற நிலையில் இருந்து வந்துள்ளது. இந்த புளியமரம் சாய்ந்தால் அருகிலுள்ள வீட்டின் மீது விழுந்து, பெரும் பாதிப்புகளை ஏற்படுத்திவிடும் என்ற அச்சத்தில் அப்பகுதி மக்கள், வருவாய்த் துறையினரிடம் மரத்தை அப்புறப்படுத்துமாறு பல முறை புகார் அளித்தும் கண்டுக்கொள்ளாமல் இருந்த நிலையில் இன்று அப்பகுதியில் திடீரென பலத்த காற்று வீசியது.

இதனால் வீட்டின் மீது புளிய மரம் விழுந்து விடுமோ என்ற அச்சத்தில்; சங்கர் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர். இதனை தொடர்ந்து சிறிது நேரத்தில் புளியமரம் வீட்டின் மேற்கூரை மீது விழுந்துள்ளது. புளிய மரம் விழுந்ததில் சங்கரின் வீட்டின் மேற்கூரை, கட்டிடங்கள் முழுவதும் சேதமாகி அருகில் இருந்த மின் கம்பமும் உடைந்து சேதமடைந்தது. புளியமரம் விழுந்ததில் சங்கர் அவரது மனைவி ஜெயசுதா நான்கு மாத கைக்குழந்தை மற்றும் இரண்டு சிறுவர்கள் உயிர் தப்பினர். மேலும் மின் கம்பம் உடைந்து விழுந்ததில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. புளியமரம் வீட்டின் மீது விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Views: - 150

0

0