லஞ்சம் வாங்கியும் மின் இணைப்பு வழங்காத அதிகாரிகளை கண்டித்து விவசாயி தீக்குளிக்க முயற்சி

Author: kavin kumar
11 August 2021, 6:31 pm
Quick Share

தருமபுரி: தருமபுரி மாவட்ட மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு, இலவச மின்சாரத்திற்கு 50 ஆயிரம் லஞ்சம் வாங்கியும், மின் இணைப்பு வழங்காத அதிகாரிகளை கண்டித்து விவசாயி தீக்குளிக்க முயற்சி செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த அண்ணாமலைஅள்ளி கிராமத்தை சேர்ந்த விவசாயி பழனிசாமி என்பவருக்கு சொந்தமாக 7 ஏக்கர் விவசாயம் நிலம் உள்ளது. இந்த விவசாய நிலத்தில் உள்ள கிணற்றுக்கு மின்சார இணைப்பு பெற கடந்த 2010 ஆண்டு கடத்தூர் மின்வாரிய செயற் பொறியாளர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார். ஆனால் விவசாய கிணற்றுக்கு மின் இணைப்பு வழங்காமல் மின்வாரிய அதிகாரிகள் பழனிசாமியை அலைக்கடித்துள்ளனர். பிறகு 50 ஆயிரம் லஞ்சம் வழங்கினால் மின் இணைப்பு வழங்குவதாக மின்வாரிய அதிகாரிகள் கூறியதையடுத்து. கடந்த சில மாதங்களுக்கு முன்பு பழனிசாமி 50 ஆயிரம் லஞ்சம் வழங்கி உள்ளார்.

50 ஆயிரம் போதாது மேலும் 50 ஆயிரம் வழங்கினால் மட்டுமே மின் இணைப்பு வழங்குவதாக அதிகாரிகள் கூறியதையடுத்து பணம் கொடுக்க தன்னிடம் வசதியில்லை என கூறி உள்ளதால் மின் இணைப்பு வழங்காமல் அதிகாரிகள் மீண்டும் காலதாமதம் செய்து வந்தனர். மின் இணைப்பு வழங்கமால் அதிகாரிகள் அலைக்கடிப்பதாக முதல்வர் தனிப்பிரிவு, மாவட்ட ஆட்சியர், மின்வாரியத்துறை உயர் அதிகாரிகள் ஆகியோருக்கு புகார் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. 11 ஆண்டுகளாக மின் இணைப்பு வழங்காததால், மனம் உடைந்த பழனிசாமி தனது மனைவி மலர்கொடியுடன் தருமபுரி மின்வாரியத்துறை மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுப்பட்டார்.

பின்னர் அவர் கையில் வைத்திருந்த கேனிலிருந்த மண்ணெண்ணையை உடல் மீது ஊற்றி தீக்குளிக்க முயன்றார் அப்போது அங்கிருந்தவர்கள் மண்ணெண்ணை கேனை பிடிங்கினர். இது குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் பழனிசாமியை அழைத்து சென்று விசாரணை செய்து வருகின்றனர். 11 ஆண்டுகளாக பேராடியும் அதிகாரிகள் மின் இணைப்பு வழங்காத வேதனையில் விவசாயி தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Views: - 183

0

0