மின்சாரம் தாக்கி உயிரிழந்த ஊழியருக்கு நிவாரணம் வழங்க வலியுறுத்தி உறவினர்கள் சாலை மறியல்

11 November 2020, 5:19 pm
Quick Share

தருமபுரி: அரூர் அருகே ஒப்பந்த மின் ஊழியர் பணியின் போது மின்சாரம் தாக்கி உயிரிழந்ததற்கு நிவாரணம் வழங்கவேண்டும் என வலியுறுத்தி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தருமபுரி மாவட்டம், அரூர் அடுத்த கோட்டப்பட்டி அம்பேத்கர் நகரைச் சேர்ந்த கமல்ராஜ் 32 தமிழ்நாடு மின்சார வாரியத்தில் கடந்த 6 ஆண்டுகளாக ஒப்பந்த ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில், கோட்டப்பட்டி ராஜாவீதியில் உள்ள மின்கம்பம் ஒன்றில் மின் ஊழியர்களுடன் சேர்ந்து பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். அப்போது மின்சாரம் தாக்கியதில் மின்கம்பத்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட கமல்ராஜ் படுகாயமடைந்த அவரை மின்ஊழியர்கள் கோட்டப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.

அங்கு கமல்ராஜியை பரிசோதித்த மருத்துவர், இவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளார். இது குறித்து கமல்ராஜின் தம்பி சிங்காரவேலன் அளித்த புகாரின் பேரில் கோட்டப்பட்டி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். நேற்று உடலை பிரேத பரிசோதனைக்காக அரூர் அரசு மருத்துமனைக்கு எடுத்துவரப்பட்டது. இது குறித்து அரசு அதிகாரிகள் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காததால் அவரது உறவினர்களுடன் மின் வாரியத்தில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களும் இணைந்து சுமார் 500-க்கும் மேற்பட்டோர் அரூர் ரவுண்டானாவில் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த காவல்துறையினர் மற்றும் மின் வாரிய துறை அதிகாரிகள் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது மின் ஊழியர் கமல்ராஜ் பணியின் போது மின்சாரம் தாக்கி உயிரிழந்ததற்கு நிவாரணம் வழங்கவேண்டும் எனவும், கமல்ராஜிக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் அவரது மனைவிக்கு அரசு வேலை வழங்கவேண்டும் என வலியுறுத்தினர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டால் சாலை மறியலை கைவிடபோவதாகவும், இல்லையென்றால் மீண்டும் சாலை மறியலில் ஈடுபடுவதாக தெரிவித்துள்ளனர். சுமார் ஒரு மணி நேரத்திற்க்கு மேலாக ஈடுபட்ட சாலை மறியலால் சேலம், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, வேலூர் செல்லக்கூடிய பேருந்துக்கள் தாமதமாக சென்றதில் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது.

Views: - 15

0

0