அருவிகளில் செந்நிறத்தில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்: 25 ஆயிரம் கன அடியாக உயரும் நீர்வரத்து

By: Udayaraman
10 October 2020, 3:31 pm
Quick Share

தருமபுரி: காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழையின், காரணமாக தமிழக எல்லையான பிலிகுண்டுலுவிற்கு 25 ஆயிரம் கன அடியாக நீர் வரத்து உயர்ந்துள்ளதால், ஒகேனக்கல்லில் உள்ள அருவிகளில் செந்நிறத்தில் ஆர்பரித்து கொட்டும் தண்ணீர்.

கர்நாடக மற்றும் தமிழக காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் கடந்த சில தினங்களாக அவ்வப்போது தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக காவிரி ஆற்றில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவிற்கு நீர் வரத்து படிப்படியாக அதிகரிக்க துவங்கி உள்ளதால், நேற்றைய நிலவரப்படி 20 ஆயிரம் கன அடியாக வந்துக்கொண்டிருந்த நீர் வரத்து இன்று காலை 10 மணி நிலவரப்படி 25 ஆயிரம் கன அடியாகவும், மதியம் 1மணி நிலவரப்படி 27 ஆயிரம் கன அடியாகவும் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகிறது. தமிழகத்திற்கு வரும் காவிரி ஆற்றில் தொடர்ந்து நீர் வரத்து அதிகரித்துக்கொண்டே வருவதால் பிலிகுண்டுலுவில் மத்திய நீர் ஆணைய ஊழியர்கள் நீர் வரத்து குறித்து இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை அளவீடும் பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

மேலும் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், ஒகேனக்கல்லில் உள்ள முக்கிய அருவிகளான சினி அருவி, தொடர் அருவி, மெயின் அருவி, ஐந்தருவி, கர்நாடகா அருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் செந்நிறத்தில் ஆர்பரித்துக்கொட்டுகிறது. தொடர்ந்து காவிரி ஆற்றில் நீர் வரத்து அதிகரித்துள்ளதால், காவிரி கரையோர மக்களுக்கு வருவாய்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா பயணிகளை அனுமதிக்க ஆய்வு செய்யப்பட்ட நிலையில் தற்போது ஒகேனக்கல்லில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக சுற்றுலா பயணிகளுக்கு விதிக்கப்பட்ட தடை தொடர்ந்து நீடிக்கப்பட்டுள்ளது.

Views: - 35

0

0