பணிக்கு சேர்ந்த இரண்டே நாளில் உணவகத்தில் இருந்துபணத்தை திருடிச்சென்ற ஊழியர்….

Author: kavin kumar
6 November 2021, 2:53 pm
Quick Share

தருமபுரி: அரூரில் பணிக்கு சேர்ந்த இரண்டே நாளில் உணவகத்தில் இருந்து 1 லட்சத்து 82 ஆயிரம் ரூபாய் பணத்தை திருடிச்சென்ற ஊழியரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.

தருமபுரி மாவட்டம் அரூர் 4 ரோட்டில் பாலமுருகன் என்பவர் உணவகம் நடத்தி வருகிறார். இந்த உணவகத்தில் பணியாற்றும் ஊழியர்கள் உணவகத்திலேயே தங்கி வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வாணியம்பாடி பகுதியைச் சேர்ந்த ரிஸ்வான் என்பவர் உணவகத்தில் பணிக்கு சேர்ந்துள்ளார். புதிதாக பணிக்கு சேர்ந்த ரிஸ்வானும் இரவு நேரத்தில் உணவகத்திலே தங்கி வந்துள்ளார். இந்நிலையில் தீபாவளிக்கு முந்தைய நாள் மூன்றாம் தேதி இரவு வழக்கம் போல உணவகத்தில் பணி எல்லாம் முடித்துவிட்டு, காலையில் ஊழியர்கள், மளிகை கடைக்கு கொடுப்பதற்கான பணம், மற்றும் சீட்டு பணம் ரூ 80 ஆயிரம் உள்ளிட்ட ரூ.1 லட்சத்து 82 ஆயிரம் பணத்தை பாலமுருகன் எல்லோருக்கும் கொடுத்து விட்டு வெளியூர் செல்வதாக திட்டமிட்டு தனது கடையின் கல்லா பெட்டியில் வைத்துள்ளார்.

இந்நிலையில் வழக்கம் போல் தீபாவளி அன்று காலை பாலமுருகனின் தாய் முருகேஸ்வரி உணவகத்தை திறந்துள்ளார். அப்பொழுது உணவகத்தில் இருந்த கல்லாப்பெட்டி உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இதனையடுத்து மகன் பாலமுருகனிடம் இந்த தகவலை தெரிவித்துள்ளார். அப்பொழுது வந்து பார்த்த பொழுது கல்லா பெட்டியில் இருந்த ரூ.1.82 லட்சம் பணம் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது. மேலும் கடையில் இரவு தங்கிய ரிஸ்வான் தலைமறைவானதை அடுத்து சந்தேகமடைந்த பாலமுருகன் தனது உணவகத்தில் இருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்துள்ளார். அதில் அதிகாலை 4 மணிக்கு ரிஸ்வான் கடையின் கல்லாப் பெட்டியை உடைத்து பணம் எடுத்துச் செல்லும் காட்சி பதிவாகியிருந்தது.

இதனைத் தொடர்ந்து கல்லாப் பெட்டியை திறந்து உடைத்து பணம் எடுத்த ரிஸ்வான் மீது பாலமுருகன் அரூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். தற்பொழுது உணவகத்தில் பணியாற்றிய ஊழியரே கடையின் கல்லாப் பெட்டியை உடைத்து பணம் திருடிச் செல்லும் சிசிடிவி காட்சிகளை வைத்து அரூர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து தலைமறைவான ரிஸ்வானை தேடி வருகின்றனர்.

Views: - 293

0

0