ஆயிரத்து 500 குழந்தைகளுக்கு சிகிச்சையளிக்க மருத்துவமனை தயார்: நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் செந்தில்குமார் பேட்டி…

Author: Udhayakumar Raman
29 June 2021, 3:33 pm
Quick Share

தருமபுரி: தருமபுரி மாவட்டத்தில் கொரோனா தொற்றின் மூன்றாவது அலையை எதிர் கொள்ளும் வகையில், ஆயிரத்து 500 குழந்தைகளுக்கு சிகிச்சையளிக்க அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை தயாரக உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் செந்தில்குமார் தெரிவித்தார்.

தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொரோனா சிகிச்சை தேவையான 10 ஆக்சிஜன் செறிவூட்டிகள், 200 பல்ஸ் ஆக்ஸி மீட்டர் உள்ளிட்ட உபகரணங்களை சீன தூதரகம் சார்பில் வழங்கப்பட்டது. இதனை தருமபுரி நாடளுமன்ற உறுப்பினர் மருத்துவர் செந்தில்குமார், இன்று அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர் மருத்துவர் அமுதவள்ளியிடம் வழங்கினார். இதனைத் தொடர்ந்து அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ரூ.10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும், புதிய தாய் சேய் நல கட்டிடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், கொரோனா இரண்டாம் அலை இந்தியா முழுவதும் அதிக அளவில் பாதிப்பு இருந்தது. இதே நிலமை தருமபுரி மாவட்டத்திலும் இருந்தது. ஆக்சிஜன் பற்றாக்குறை, படுக்கை பற்றாக்குறை ஏற்பட்டது. தற்போது அரசு உதவியுடன் அனைத்து தேவைகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது. கொரோனா மூன்றாம் அலை தாக்கம் ஏற்பட்டால், சிகிச்சை அளிக்க அனைத்து அறைகளுக்கும் ஆக்சிஜன் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த கட்டிடம் விரைவில் பணி முடித்து மருத்துவமனை வசம் ஒப்படைக்கப்படும்.

கொரொனா மூன்றாம் அலை ஏற்பட்டாலும் 1500 குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்க அனைத்து வசதிகளுடன் மாவட்ட மருத்துவமனை தயார் நிலையில் உள்ளதாக கூறிய அவர், ஆயிரம் சிலிண்டர் கொள்ளவு கொண்ட ஆக்சிஜன் தயாரிப்பு கூடம் அமைக்க தனியார் நிறுவனத்துடன் பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாகவும், பேச்சு வார்த்தை முடிவுற்ற பணிகள் துவங்கி ஆக்சிஜன் தருமபுரி மாவட்டத்தில் அரூர், பாலக்கோடு, மேட்டூர் உள்ளிட்ட மருத்துவமனைகளுக்கு முழுமையாக வழங்கப்படும் என கூறிய அவர் தனது நாடாளுமன்ற தொகுதி நிதி ஒதுக்கீடு வந்த பிறகு அரசு மருத்துவமனைக்கு மருத்து வசதிகள் கூடுதலாக செய்து தரப்படும் உறுதியளித்தார்.

Views: - 379

0

0