புயல், மழை வெள்ள பாதிப்புகளை சரி செய்ய தயாராக இருக்க வேண்டும்: மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அறிவுறுத்தல்

Author: kavin kumar
21 October 2021, 6:53 pm
Quick Share

தருமபுரி: வடகிழக்கு பருவமழை காலத்தில் எதிர்பாராமல் ஏற்படும் புயல், மழை வெள்ள பாதிப்புகளை போர் கால அடிப்படையில் சரி செய்ய அனைத்து துறை அதிகாரிகளும் தயாராக இருக்க வேண்டும் என முதன்மை செயலாளரும், மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அறிவுறுத்தியுள்ளார்.

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த ஆய்வுக்கூட்டம் முதன்மை செயலாளரும், தொழிலாளர் நல ஆணையர், மற்றும் தருமபுரி மாவட்ட கண்கணிப்பு அலுவலர் முனைவர். அதுல் ஆனந்த், தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தருமபுரி மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர் இருப்பு விவரத்தையும், நிரம்பினால் உபரிநீர் செல்லும் வழிகள் குறித்தும் கேட்டறிந்தார். மேலும் பேரிடர் மற்றும் மீட்பு பணிகளுக்கு தேவையான உபகரணங்கள் தயாராக உள்ளதாக எனவும் மீட்பு பணித் துறையினரிடம் கேட்டறிந்தார்.

இதனை தொடர்ந்து பேசிய தொழிலாளர் நல ஆணையர் அதுல் ஆனந்த் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தருமபுரி மாவட்டத்தில் மழை காலங்களில் அதிகம் பாதிப்புக்குள்ளாக கூடிய இடங்கள், நடுத்தர பாதிப்புக்குள்ளாக கூடிய இடங்கள், குறைவான அளவு பாதிப்பு ஏற்படக் கூடிய இடங்கள் உள்ளிட்டவற்றை அடையாளம் கண்டறிந்து போதிய பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு அலுவலர்கள் முழுமையாக மேற்கொள்ள வேண்டும் எனவும், இத்தகைய இடங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் நிவாரணப் பணிகளையும் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும்.

வடகிழக்கு பருவமழை காலத்தில் எதிர்பாராமல் ஏற்படும் புயல் மற்றும் மழை வெள்ள பாதிப்புகளை போர் கால அடிப்படையில் சரி செய்யவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இழப்புகளை தடுக்கவும், மழை காலத்தை எதிர்கொள்ளவும், ஒவ்வொரு துறையினரும் அவசர காலத் திட்டம் தயாரித்து அதன்படி செயல்பட தயார் நிலையில் இருக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். மேலும் வெள்ளம் பாதித்த பகுதிகளில் உபயோகப்படுத்த தேவையான வயர்லெஸ் கருவிகளை தயார் நிலையில் வைத்து கொள்ள வேண்டும். தொடர்ந்து தீயணைப்பு துறையினர் இயற்கை இடர்பாடுகளை சரி செய்யவும் மீட்பு பணிகளுக்காக தயார் நிலையில் இருக்க வேண்டும். மருத்துவ துறையில் தேவையான மருந்துகள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் தயாராக இருக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திவ்யதர்சினி, மற்றும் பல்வேறு அரசு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Views: - 347

0

0