சுமார் 10 கோடி ரூபாய் மதிப்பிலான ஆடுகள் விற்பனை: ஆந்திரா ஆடு விற்பனை வருகையால் உள்ளூர் ஆடுகள் விற்பனை குறைவு

12 January 2021, 6:35 pm
Quick Share

தருமபுரி: நல்லம்பள்ளி வாரசந்தையில் ஆந்திரா ஆடு விற்பனை வருகையால் உள்ளூர் ஆடுகள் விற்பனை குறைந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

தருமபுரி மாவட்டத்தில்,இன்று நல்லம்பள்ளி வாரச்சந்தை நடைபெற்றது. விவசாயிகள் தாங்கள் வளர்த்து வந்த ஆடுகளை பொங்கல் பண்டிகைக்காக விற்பனைக்கு கொண்டு வந்தனர். தருமபுரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும், அதே போல் சேலம் மாவட்டம் மற்றும் ஆந்திரா மாநிலத்திலிருந்து சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்கு வந்தது. பொதுமக்கள் பொங்கல் பண்டிகைக்காக இன்று அதிகாலை 4 மணியிலிருந்து ஆடுகளை வாங்க குவிந்தனர்.

சுமார் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் ஆடுகளை வாங்க வந்திருந்தனர். சந்தை முழுவதும் மக்கள் கூட்டம் அலைமோதியது. சந்தையில் குறைந்த விலையாக ஒரு ஆடு 10 ஆயிரம் ரூபாயில் தொடங்கி 30 ஆயிரம் ரூபாய் வரை விற்பனையானது.சென்ற வாரத்தை விட இந்த வாரம் ஆடுகளின் விலை சுமார் 2000 ரூபாய் முதல் 3 ஆயிரம் ரூபாய் வரை உயர்ந்து விற்பனையானது.மேலும் ஆந்திரா மாநிலத்திலிருந்து பண்ணையில் வளர்க்கப்படும் ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வந்து குறைந்த விலைக்கு விற்பனை செய்ததால்,

உள்ளூர் பகுதியில் விவசாயிகள் வளர்த்த ஆடுகளை வியபாரிகள் மற்றும் பொதுமக்கள் வாங்க ஆர்வம் காட்டவில்லை இதனால் உள்ளூர் ஆடுகள் விற்பனையாகவில்லை. மேலும் ஆட்டு சந்தையில் நுழைவு கட்டணம் அரசு நிர்ணயம் செய்த கட்டணத்தை விட ஒரு ஆட்டுக்கு 30 ரூபாய்க்கு பதில் 100 ரூபாய் வரை அதிக கட்டணம் வசூல் செய்ததால் உள்ளூர் விவசாயிகள் பாதிக்கப்பட்டனர்.

Views: - 9

0

0