கணவர் அடித்து துன்புறுத்துவதாக கூறி பெண் கைக்குழந்தையுடன் தர்ணா போராட்டம்

Author: Udhayakumar Raman
20 September 2021, 6:59 pm
Quick Share

விருதுநகர்: விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் அடித்து துன்புறுத்துவதாக கூறி பெண் கைக்குழந்தையுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள மணி பாறைப்பட்டி சேர்ந்தவர் வீரலட்சுமி. இவருக்கும் மதுரை மாவட்டம் எம் புதுப்பட்டி யைச் சார்ந்த குணசக்தி என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆகி உள்ளது. திருமணமாகி ஒன்றரை வயதில் பெண் குழந்தை உள்ள நிலையில் குண சக்தி மற்றும் அவரது தாய் தந்தை வீரலட்சுமியை அடித்து துன்புறுத்தி கொடுமைப்படுத்தியதாக கூறி வீரலட்சுமி வில்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து உயிருக்கு ஆபத்து இருப்பதால் வீரலட்சுமி தனது கைக்குழந்தையுடன் விருதுநகரில் உள்ள தனது தாய் வீட்டில் கடந்த ஆறு மாதங்களாக வசித்து வருகிறார்.

இந்த நிலையில் அடித்து துன்புறுத்தி உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் கணவர் மற்றும் கணவரின் குடும்ப உறுப்பினர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து தனக்கு தன் தாய் வீட்டிலிருந்து திருமண சீர்வரிசை அளித்த நகை மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களை திரும்ப பெற்றுத்தர வேண்டும் எனக் கூறி பலமுறை காவல் நிலையத்திற்கும் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளித்துள்ளார். இதுகுறித்து உரிய நடவடிக்கை இதுவரை எடுக்கப்படாத நிலையில், இன்று விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வாசலில் ஆட்சியர் கார் முன்பு வீரலட்சுமி தனது ஒன்றரை வயது குழந்தையுடன் அமர்ந்து திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அங்கு இருந்த சூலக்கரை காவல் துறையினர் வீரலட்சுமி விசாரணைக்கு சூலக்கரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

Views: - 95

0

0