மீண்டும் ஒரு மூத்த தேவி சிலை கண்டெடுப்பு: 1200 ஆண்டுகளுக்கு முற்பட்ட பல்லவ காலத்து சிலைகள் என தகவல்

Author: Udhayakumar Raman
7 September 2021, 4:33 pm
Quick Share

காஞ்சிபுரம்: உத்திரமேரூர் அரசாணி மங்கலம் அருகே மீண்டும் கண்டெடுக்கப்பட்ட மூத்த தேவி சிலை இது சுமார் 1200 ஆண்டுகளுக்கு முற்பட்ட பல்லவ காலத்து சிலைகள் என கூறப்படுகிறது.

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே அரசாணி மங்கலம் கிராம வயல்வெளி பகுதியில் 1200 ஆண்டுகளுக்கு முற்பட்ட 9ஆம் நூற்றாண்டை சார்ந்த மூத்ததேவி எனப்படும் ஜேஷ்டா தேவி சிலையையும் ,அய்யனார் சிலையையும் உத்திரமேரூர் வரலாற்று ஆய்வு மையத்தினர் கண்டறிந்துள்ளனர். மேலும் ஒரு சிலை மண்ணில் புதைந்து காணப்படுகிறது. இது குறித்து உத்திரமேரூர் வரலாற்று ஆய்வு மையத் தலைவர் கொற்றவைஆதன் அவர்கள் கூறுகையில், அரசாணி மங்கலம் கிராமம் பழமையான கிராமமாகும். இக் கிராமத்தில் முதலாம் இராஜராஜ சோழன் ஆட்சிக்காலத்தில் காசி விஸ்வநாதர் ஆலயம் கட்டப்பட்டதாக கல்வெட்டுக் குறிப்புகள் உள்ளது. மேலும் கோட்டைமேடு என்ற பகுதியும் அவ்வூரின் தொன்மையைப் கூறுகிறது.

இந்த கிராமத்தில் பல்லவர்களின் இறுதிக்காலத்தை சார்ந்த மூத்ததேவி எனப்படும் ஜேஷ்டாதேவி சிலை கண்டறியப்பட்டது. 2 1/2 அடி உயரத்தில் 2 அடி அகலத்தில் அமர்ந்த நிலையில் அடிப்பாகம் மண்ணில் புதைந்து காணப்படுகிறது. இவரின் வலப்பக்கம் மாட்டுத் தலை கொண்ட அவரது மகன் மாந்தனும் இடப்பக்கம் அவரது மகள் மாந்தியும் வீற் றிருக்கிறார்கள். வலப்பக்கம் அவரின் சின்னமான காக்கை கொடி உள்ளது. மூத்த தேவினுடைய தலையில் கரண்ட மகுடமும் காதில் மகர குண்டலமும் கழுத்தில் சரப்பளி ஆபரணமும் மார்பில் சன்னவீரமும் தோல்களில் வாகுவளையங்களும் ,கைகளில் வளையல்களும் ,பருத்த வயிறோடு விரிந்த கால்களும், இடையில் இருந்து பாதம் வரை நீண்ட ஆடையோடு அழகிய புடைப்பு சிற்பமாக காட்சியளிக்கிறது.

மூத்த தேவிக்கு தவ்வை ,ஜேஷ்டாதேவி என பெயர்களுண்டு. இவர் திருமாலின் மனைவியான லட்சுமி தேவியின் மூத்த சகோதரி ஆவார். இவர் குறித்த தகவல் சங்க இலக்கியங்களில் மற்றும் திருவள்ளுவர் ,அவ்வையார் போன்ற பெரும் புலவர்களும் குறிப்பிட்டுள்ளனர். பல்லவர் காலத்தில் வழிபாட்டின் உச்சத்தில் இருந்த இந்த தாய் தெய்வம் நந்திவர்ம பல்லவனின் குலதெய்வமாக இருந்துள்ளது . இதனால் பல்லவர் கால ஆலயங்களில் வீற்றிருப்பார், சில கோயில்களில் இவருக்கென்று தனி சன்னதியும் இருந்துள்ளது. பிற்கால சோழர் காலத்திலும் வழிபாட்டில் தொடர்ந்த இந்த தெய்வம் வளமையின் அடையாளமாக குழந்தைப்பேறு தருபவளாக செல்வ வளம் பெருக்குபவளாக போற்றப்பட்டாள். நாளடைவில் மூத்ததேவி என்பது மருவி மூதேவி ஆக வழக்கில் வந்து வழிபாடு இல்லாமல் போயுள்ளது . இது பல்லவர்களின் இறுதிக்காலத்தை சார்ந்ததாகும் என்றார்.

அதேபோல் இரண்டாவதாக காளியம்மன் கோயில் அருகில் , 3 1/2அடி உயரத்தில் 2 அடி அகலத்தில் அய்யனார் சிலை கண்டறியப்பட்டது. இவரது தலைமுடி ஜடாபார சிகை அலங்காரத்துடன் காதுகளில் பத்ர குண்டலமும் கழுத்தில் அணிகலன்கலாக கண்டிகை மற்றும் சரப்பளியும் ,மார்பில் முப்புரி நூலும் ,தோல்களில் வாகு வளையங்களும், கைகளில் காப்பு ஆகியவற்றுடன் வலது காலை தொங்கவிட்டுக் கொண்டு இடது காலை மடித்து உட்குதிகாசன நிலையில் வலக்கையில் சென்டை ஏந்தியும் இடக்கையை கால் முட்டியின் மீது வைத்து ஓர் இருக்கையில் அமர்ந்து அழகிய நிலையில் புடைப்புச் சிற்பமாகக் காட்சியளிக்கிறார்.

இவரது இடையில் முடிச்சுகளுடன் கூடிய ஆடை தொடைவரை நீண்டு காணப்படுகிறது. இது 9ஆம் நூற்றாண்டை சார்ந்ததாகும்‌ என கொற்றவை ஆதன் கூறினார். கடந்த கால வரலாற்றை நிகழ்கால சமுதாயத்திற்கு அடையாளமாக பறைசாற்றி கொண்டிருக்கும் இவ் அரிய கலை பொக்கிஷங்கள் வயல்வெளியிலும் மண் மேட்டிலும், புதர் காட்டிலும் மறைந்து அழிந்து கொண்டிருக்கின்றன ,அவற்றை உரிய கவனம் செலுத்தி மீட்டெடுத்து அரசு பாதுகாக்க வேண்டும் என வேண்டுகோள் வைத்தார்.

Views: - 85

0

0