கோவை விமான நிலைய கழிவறையில் துப்பாக்கி தோட்டாக்கள் கண்டெடுப்பு

25 September 2020, 9:57 pm
Quick Share

கோவை: கோவை விமான நிலையத்தில் உள்ள கழிப்பறையில் துப்பாக்கி தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை சர்வதேச விமான நிலையத்துக்கு தினமும் உள்நாடு தவிர பல்வேறு வெளிநாடுகளுக்கும் விமானங்கள் வந்து செல்கின்றன. தற்போது கொரோனா பாதிப்பால், சர்வதேச விமானங்கள் குறைந்தளவே இயக்கப்படுகின்றன. இதனால் பயணிகளின் வரத்து குறைவாகவே உள்ளது. கோவை விமான நிலையத்தின் பாதுகாப்பு பணிகளை மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், விமான நிலையத்தின் உள்நாட்டு விமானங்கள் புறப்படும் பகுதிக்கு அருகில் ஆண்கள் கழிவறையில் இன்று துப்புரவு பணியாளர் துாய்மைப்பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது கழிவறையின் உள்பகுதியில் துப்பாக்கித் தோட்டாக்கள் கிடப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து அவர் விமான நிலைய அதிகாரிகளிடம் தெரிவித்தார். இதையடுத்து அங்கு வந்த மத்திய தொழில் பாதுகாப்பு படையினர்(சி.ஐ.எஸ்.எப்.,) துப்பாக்கித் தோட்டாக்களை கைப்பற்றி ஆய்வு செய்தனர். அதில், ஒரு எஸ்.எல்.ஆர்., ரக துப்பாக்கி தோட்டாவும், மூன்று, 9 எம்.எம்., துப்பாக்கி தோட்டக்களும், இரு போலி தோட்டாக்களும் இருந்தன. இதையடுத்து சி.ஐ.எஸ்.எப்., பீளமேடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு சென்ற போலீசார் தோட்டாக்களை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் கழிப்பறையில் தோட்டாக்களை போட்டது யார் என்பது குறித்த தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். விமான நிலையத்தின் கழிப்பறையில் துப்பாக்கி தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.