ஒன்றியக்குழு கூட்டத்தில் திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு
15 September 2020, 8:41 pmஅரியலூர்; திருமானூரில் நடைப்பெற்ற ஒன்றியக்குழு கூட்டத்தில் திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்ததால் தேதி குறிப்பிடாமல் கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.
அரியலூர் மாவட்டம் திருமானூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், ஒன்றியக்குழு சாதாரண ௯ட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்துக்கு ஒன்றியக்குழு தலைவர் திமுகவின் சுமதி அசோகசக்கரவர்த்தி தலைமை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜாகீர்உசேன்,செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில் ஒன்றியக்குழு தலைவரோடு துணைத்தலைவர் அதிமுகவை சேர்ந்த அம்பிகாராஜேந்திரன் மேடையில் அமரக்கூடாது என்றும் மற்ற உறுப்பினர்களோடு கீழ் வரிசையில் தான் அமர வேண்டும் எனக்கூறி திமுக உறுப்பினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்படாத திமுக உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறும் அறையை விட்டு வெளியேறினர். திமுக தரப்பில் 11 உறுப்பினர்களும், அதிமுக மற்றும் அதன் கூட்டணி தரப்பில் 10 உறுப்பினர்களும் உள்ள நிலையில் தீர்மானங்கள் எதுவும் நிறைவேற்றப்பட வில்லை. இதனால் கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது.