மக்களின் எதிர்ப்பை மீறி மதுபானக்கடையை திறந்த திமுக : மதுபான கடையை முற்றுகையிட முயன்ற பெண்கள்

14 July 2021, 5:57 pm
Quick Share

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் மக்களின் எதிர்ப்பை மீறி திமுகவினர் மதுபானக்கடையை திறந்ததால் பெண்கள் ஆவேசத்துடன் மதுபான கடையை முற்றுகையிட முயன்றனர். காவலர்கள் தடுத்ததால் பெண்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் நீர்வள்ளூர் கிராமத்தை சேர்ந்தவர் விபீஷணன். செல்வந்தரான இவர் திமுக கட்சியின் ஒன்றிய பிரதிநிதியாகவும் ராஜகுளம் கூட்டுறவு வங்கியின் முக்கிய பொறுப்பிலும் உள்ளார். இவரின் உடன்பிறந்த தம்பியும், திமுக ஒன்றிய உறுப்பினருமான சரவணன் என்பவருடன் இணைந்து பங்குதாரராக செயல்பட்டு நீர்வள்ளூர் கிராமத்தில் இன்று காலை அரசு மதுபான கடையை திறந்தனர். இந்த கிராமத்தில் எல்&டி போன்ற மிகப் பெரிய தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றது. இங்கு சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உள்ளூர் மற்றும் வடமாநில வாலிபர்கள் பணிபுரிகின்றனர்.

தேசிய நெடுஞ்சாலை மிக அருகாமையில் உள்ளதால் இந்த கிராமங்களைச் சுற்றியுள்ள 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் இந்த மதுபான கடையை கடந்துதான் முக்கிய சாலைக்கு செல்ல வேண்டும். உயர்கல்வி மற்றும் மேல்நிலை கல்வி பயிலவும், காய்கறி வாங்க மார்கெட் செல்வதற்கும், சென்னை வேலூர் ,பெங்களூர், திருப்பதி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு போன்ற பகுதிகளுக்கு செல்வதற்கும் மதுபானக்கடை வழியாகதான் சென்றாக வேண்டும்.இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த இந்த பகுதியில் மதுபானக்கடை திறந்தால் ஜாதி பிரச்சனை , அடிதடி , பெண்களிடம் தவறாக நடப்பது ,வெட்டு குத்து, திருட்டு போன்ற பல பிரச்சனைகள் ஏற்படும்.

மேலும் இந்த பகுதியில் உள்ள மக்கள் மற்றும் வாலிப பிள்ளைகள் இந்த மதுபான கடைக்கு சென்று மது அருந்தும் பழக்கத்துக்கு அடிமையாகி விடுவார்கள்.இதை கருத்தில் கொண்ட அப்பகுதி மக்கள் கடந்த ஆட்சியின்போது மனு கொடுத்து அரசு மதுபானக் கடையை திறக்காமல் செய்தார்கள்.அதேபோல் திமுக ஆட்சி அமைந்தவுடன் இங்கு மதுபானக்கடை வேண்டாம், இங்கு திறக்கக்கூடாது என 21 க்கும் மேற்பட்ட மகளிர் அமைப்பினர் மாவட்ட ஆட்சியருக்கு ஏற்கனவே மனு அளித்திருந்தனர்.இந்த சூழ்நிலையில் திமுக கட்சியை சேர்ந்த விபீஷணன், தம்பி சரவணன் ஆகியோர் ஆரியம் பாக்கம் திமுக கிளைச் செயலாளர் ஆரமுதன், ரஜினி ஆகியோரின் துணையுடன் மக்கள் எதிர்ப்பையும் மீறி டாஸ்மார்க் கடையை திறந்தனர்.

இதை கேள்விப்பட்ட பெண்கள் அனைவரும் மதுபான கடை அமைந்துள்ள பகுதியில் ஒன்றாக சேர்ந்து மதுபான கடையை முற்றுகையிட முயன்றனர்.காஞ்சிபுரம் தாலுகா காவல் ஆய்வாளர் ராஜகோபால் தலைமையில் 15-க்கும் மேற்பட்ட காவலர்கள் அந்தப் பெண்களை தடுத்து நிறுத்தி உங்கள் மீது வழக்குப் போடுவோம், கைது செய்வோம் என பயமுறுத்தினர். வந்த அனைத்து பெண்களும் இந்த மதுபானக்கடையால் எங்கள் குடும்பம் கெட்டுப்போய்விடும். இந்தப் பகுதியில் உள்ள வாலிபர்கள் மது அருந்திவிட்டு எங்கள் வீட்டுப் பிள்ளைகளை கிண்டல் செய்வார்கள், கையைப் பிடித்து இழுப்பார்கள், ஜாதி பிரச்சனை ஏற்படும், எனவே நாங்கள் இங்கு மதுபானக்கடையை நடத்த அனுமதிக்க மாட்டோம் என்று கோஷமிட்டு திடீரென சாலையில் அமர்ந்து சாலை மறியல் செய்தனர்.

இதை சற்றும் எதிர்பார்க்காத காவல்துறையினர் வருவாய்த் துறையினருக்கு தகவல் அளித்ததன் பேரில் சம்பவ இடத்திற்கு காஞ்சிபுரம் வட்டாட்சியர் நிர்மலா அவர்கள் நேரில் வந்து அப்பகுதி பெண்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினார்.அப்பகுதி பெண்கள் மதுபான கடையை நடத்த விடமாட்டோம் என உறுதியாக தெரிவித்த நிலையில் வட்டாட்சியர் நிர்மலா அவர்கள் அந்தக் கடையை தற்காலிகமாக மூட உத்தரவிட்டார்.அதன்பேரில் இன்று காலையில் திமுகவினரால் திறக்கப்பட்ட இந்த மதுபான கடை மாலையிலேயே மூடப்பட்டது குறிப்பிடத்தக்கது. மீண்டும் இந்த அரசு மதுபான கடையை திறந்தால் இங்கு மிகப்பெரிய போராட்டம் மற்றும் தீக்குளிப்பு ஏற்படும் என அப்பெண்கள் உறுதியுடன் தெரிவித்தனர்.

Views: - 37

1

0