குறை கூறுவதற்கு முன்னால் திமுக தனது வேட்டியை இறுக்கிக் கட்டிக் கொள்ள வேண்டும்: பாஜக பொதுச்செயலாளர் இராம.ஸ்ரீனிவாசன் பேச்சு

Author: Udayaraman
15 October 2020, 11:52 pm
Quick Share

திருவாரூர்: தங்களைப் பற்றி குறை கூறுவதற்கு முன்னால் திமுக தனது வேட்டியை இறுக்கிக் கட்டிக் கொள்ள வேண்டும் என்றும், திமுகவின் கோட்டை கலகலத்து கொண்டிருப்பதாக பாஜக பொதுச்செயலாளர் இராம.ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளார்.

திருவாரூரில் பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பாஜக மாநில பொதுச் செயலாளர் கிராம ஸ்ரீனிவாசன் கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது:- கூட்டம் கூட்டமாக மாற்று கட்சியினர் பாஜகவில் இணைந்து வருகின்றனர். திமுகவிலிருந்து அதிகமானோர் விலகி பாஜகவில் இணைந்து வருகிறார்கள். இது தமிழக அரசியலில் திமுக எதிர்பார்க்காத ஒரு திருப்பம். திமுக ஒரு கலைக்க முடியாத கோட்டை யாரும் வெளியே போக மாட்டார்கள் என ஸ்டாலின் கூறியுள்ளார். ஸ்டாலினுக்கு பயம் வந்து விட்டதால் அப்படி பேச ஆரம்பித்துள்ளார். திமுக தலைவர் ஸ்டாலினுக்கு பாஜகவை பார்த்து அச்சம் வந்துவிட்டது. அந்த அச்சத்தின் விளைவாக தான் திமுகவை யாரும் பலவீனப்படுத்த முடியாது என பேசியுள்ளார்.

அவர் பேசியதே எங்களுக்கு வெற்றி தான் அதிமுகவில் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுத்ததற்கு வரவேற்பு தெரிவித்துக்கொள்கிறோம். சட்டமன்ற தேர்தலில் திருவாரூர் தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் போட்டியிடப் போகிறார் என ஒரு செய்தி வருகிறது. பாஜகவும் அதைத்தான் விரும்புகிறது. உதயநிதி ஸ்டாலின் திருவாரூரில் போட்டியிட்டால் பாஜக அவரை தோற்கடிக்கும். அவரது தாத்தா வெற்றி பெற்ற தொகுதி என நினைத்து அவர் போட்டியிட்டால் பாஜக வேட்பாளர் நிச்சயமாக அவரை களம் காண்பார். பழைய காலங்கள் மாறிவிட்டன. திருவாரூர் மாவட்டம் என்பது திமுக மாவட்டம் என்கிற காலம் எல்லாம் முடிந்து விட்டது. தற்போது புதிய ஆன்மீக சிந்தனைகள் உள்ள ஆயிரக்கணக்கான இளைஞர்கள் பாஜகவில் இணைந்து வருகிறார்கள். வரக்கூடிய சட்டமன்ற தேர்தல் அதனை நிரூபிக்கும்.

எல்.முருகன் போன்றோர் பாஜகவில் இருக்கும் வரை தமிழகத்தில் பாஜக வளராது என திமுக எம்பி டிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ள கருத்து குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், எல்.முருகன் பாஜக தலைவராக பொறுப்பேற்ற பிறகு தான் திமுக சட்டமன்ற உறுப்பினர் செல்வம் பாஜகவுக்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார். சட்டமன்றம் நடந்துகொண்டிருந்த வேளையில் சட்டமன்ற உறுப்பினரே இல்லாத கட்சிக்கு ஒருவர் சென்றதாக இதுவரை வரலாறு இல்லை. அது திமுகவில் தான் நடந்துள்ளது. அதேபோல் திமுகவின் மூத்த தலைவர் வி பி துரைசாமி எல்.முருகன் தலைவராக இருக்கும் போதுதான் பாஜகவில் இணைந்துள்ளார். எங்களைப் பற்றி குறை கூறுவதற்கு முன்னால் திமுக தனது வேட்டியை இறுக்கி கட்டிக் கொள்ள வேண்டும். திமுகவின் கோட்டை கலகலத்து கொண்டிருக்கிறது என தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Views: - 27

0

0