டாக்டர் திரைப்படம் திரையரங்கில் வெளியாவது மகிழ்ச்சி: சிவகார்த்திகேயன் பேட்டி

Author: Udhayakumar Raman
20 September 2021, 8:53 pm
Quick Share

கோவை: திரைப்படங்கள் திரையரங்குகளில் ரிலீஸ் செய்யப்படுவதையே தான் விரும்புவதாகவும், டாக்டர் திரைப்படம் வரும் 9ம் தேதி திரையரங்கில் தான் வெளியாகும் என்று நடிகர் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

கோவை பந்தயசாலை பகுதியில் கார்ட்டுனிஸ்ட் மதியின் இணையதள துவக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் திரைப்பட நடிகர் சிவகார்த்திகேயன், எழுத்தாளர் நாஞ்சில் நாடன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கார்ட்டூனிஸ்ட் மதி வரைந்த இரண்டு கார்ட்டூன்களை வெளியிட்டு நடிகர் சிவகார்த்திகேயன் பேசினார். இதனை தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பெட்ரோல், டீசல் விலையை தாண்டி தண்ணீரின் விலை இருக்கும் என்பதை மதியின் கார்ட்டூன் காட்டுகிறது. 2001 முதல் 2003 வரை என் அப்பா கோவையில் வேலை செய்த போது, திருச்சியில் இருந்து இங்கு வருவேன். அப்போது திருச்சியில் வெப்பம் அதிகமாக இருக்கும். கோவை சிலுசிலுவென இருக்கும். இப்போது சூட்டிங் வரும் போது கோவையில் ஏ.சி. இல்லாமல் இருக்க முடியவில்லை. என்ன செய்வது என தெரியவில்லை.

இப்போது குடிக்க தனியாக தண்ணீர், பாத்திரம் கழுவ தனியாக தண்ணீர் என இருக்கிறது. தண்ணீர் பற்றாக்குறையால் வணிகமயமானதா? அல்லது தண்ணீர் பற்றாக்குறையால் வணிகமயமானதா? எனத் தெரியவில்லை. அந்த அரசியலுக்குள் போக விரும்பவில்லை. அடுத்த தலைமுறைக்கு தண்ணீர் கிடைக்க தண்ணீரை வீணாக்க கூடாது. பணம் சம்பாதித்து என்ன செய்ய போகிறோம்? அல்லது சம்பாதிப்பதை தண்ணீர் வாங்கப் போகிறோமா? எனத் தெரியவில்லை. அம்மா, அக்கா, மனைவி, மகள் என பெண்களால் சூழப்பட்ட உலகில் வளர்க்கப்பட்டவன் நான். அப்பா 17 வயதில் இறந்தது முதல் எனை சுற்றி அந்த 4 பெண்கள் தான் உள்ளனர். உண்மையான பாசம், அன்பு, எதிர்பார்ப்பு இல்லாத அன்பை அவர்களிடம் கற்றுக் கொண்டேன். பெண்கள் மீதான சமுதாய பார்வை மாற வேண்டும்.

பெண்கள் பார்வையில் இந்த உலகம் அழகாக மாறுவது ஆண்கள் கையில் தான் இருக்கிறது. எனது மகன் வளரும் போது அவன் எப்படி பெண்களிடம் நடந்து கொள்ள வேண்டும் என்பதை அழகாக சொல்லித் தருவேன். என்னை விட என் மகனை நல்லவனாக வளர்க்க ஆசைப்படுகிறேன். பல வருடங்களாக நாம் பார்த்து ரசித்த கார்ட்டூன்களை வரைந்தவர் மதி. விழிப்புணர்வு மற்றும் கருத்துக்களை கார்ட்டூன் மூலம் உலகிற்கு சொல்வது தான் அவரது ஐடியா. ஒவ்வொரு சொட்டு தண்ணீரையும் பத்திரமாக பார்க்கும் நிலை வரக்கூடாது. குடிக்கும் தண்ணீரை விலை கொடுத்து வாங்குவது வணிகம் தான். அது பெரிய வணிகமாக கூடாது. டாக்டர் திரைப்படம் அக்டோபர் 9 ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியாவது தயாரிப்பாளர் எடுத்த முடிவு.

டியேட்டரில் படம் வர வேண்டும் என்பது தான் எனது ஆசை. டியேட்டரில் படம் பார்த்து வளர்ந்த ஆள் நான். காலச்சூழலில் எனது ஐடியாவை மட்டும் திணிக்க முடியாது. எது சரியாக இருக்கிறதோ அதை செய்யுங்கள் என தயாரிப்பாளரிடம் சொல்லியிருந்தேன். டியேட்டர் திறந்ததால், தியேட்டரில் படம் வருவது மகிழ்ச்சி.தியேட்டரில் படம் பார்ப்பது ஒரு கொண்டாட்டம். எனது படம் ஒடிடியில் வெளியாகமால் திரையரங்குகளில் வெளியாவது மகிழ்ச்சியாக உள்ளது.
நாய்சேகர் படம் சூட்டிங் முடிந்து ரெடியாகி விட்டது. நடிகர் வடிவேலிடம் சதீஷ் பேசியுள்ளார். வேறு டைடில் வைப்பதாக வடிவேல் சொல்லியுள்ளார். அந்த டைடிலை வைத்து படம் முழுக்க எடுத்துள்ளனர். சதீஷ் ஹீரோவாக நடிப்பதால் பெரிய டைடில் தேவைப்படுகிறது. வடிவேலுக்கு அது தேவைப்படாது. எந்த டைடில் வைத்தாலும் அருமையாக தான் இருக்கும். தமிழில் படத்தின் டைடில் வைப்பது நல்லது. நானும் தமிழில் டைடில் வைக்க சொல்கிறேன். ஆனால் ஒடிடியில் படம் வெளியாவதால் எல்லா மொழிகளிலும் வெளியிட எளிதாக உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

Views: - 88

0

0