ஆட்சியரிடம் கோரிக்கை நாடக கலைஞர்கள் மனு: மேடை நிகழ்ச்சிக்கு அனுமதி மறுப்பதாக வேதனை..

1 February 2021, 4:43 pm
Quick Share

சேலம்: நாடக கலைஞர்களின் வாழ்வாதாரம் சம்பந்தமாக சேலம் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர். மேலும் தமிழக அரசு விழாக்கள் நடத்த அனுமதி அளித்தும் மாவட்ட காவல்துறையினர் மேடை நிகழ்ச்சிக்கு அனுமதி மறுப்பதாக நாடக நடிகர்கள் வேதனை தெரிவித்தனர்.

சேலம் மாவட்ட விதைகள் நாடக கலைஞர்கள் சங்கத்தின் வாராந்திர மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு அளிக்க வந்திருந்தனர். சங்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சிவக்குமார் தலைமையில் நாடக நடிகர்கள் மற்றும் நடிகைகள் உடன் இருந்தனர். அந்த மனுவில் கடந்த 2020ஆம் ஆண்டில் ஏற்பட்ட கொரோனா பேரிடர் காரணத்தினால் சேலம் மாவட்டத்தில் இருக்கக்கூடிய சுமார் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட நாடக கலைஞர்களின் குடும்பம் சாப்பாட்டிற்கு கூட வழியில்லாமல் மிகுந்த வறுமையில் வாடி வருகிறோம். அந்த வேளையில் தமிழக அரசு ஜனவரி மாதம் முதல் வீதி திருவிழாக்கள் கலாச்சார நிகழ்வுகள் நடத்திக் கொள்ளலாம் என்று அறிவித்தது.

தை 1-ஆம் தேதி முதல் வைகாசி மாதம் வரை சேலம் மாவட்டத்தில் திருவிழா நடத்தி மேடை நாடகங்கள் நடத்தலாம் என்று கிராம மக்கள் ஏற்பாடு செய்து அனுமதிக்காக காவல் நிலையம் சென்று திருவிழா நடத்தும் நாடகங்கள் நடத்தவும் அனுமதி மறுக்கிறார்கள். ஆகவே சேலம் மாவட்ட ஆட்சியர் ஆகிய தாங்கள் தங்கள் வாழ்வாதாரத்தை காக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு திருவிழாவும், நாடகங்களும் தடையில்லாமல் நடத்த ஆணை பிறப்பிக்கும் ஆணை பிறப்பிக்குமாறு தங்களது பொற்பாதங்களை தொட்டு பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் தேர்தல் காலங்களில் திருவிழாக்களில் நாடகங்கள் தங்குதடையின்றி இரவு இரண்டு மணி வரை நடந்த தலைமை தேர்தல் அதிகாரிக்கு பரிந்துரை செய்ய வேண்டும் என்றும், இருகரம் கூப்பி பணிவுடன் கேட்டுக் கொள்வதாக அந்த மனுவில் விதைகள் நாடக கலைஞர்கள் சங்கத்தின் குறிப்பிட்டிருந்தனர். இதுகுறித்து மேடை நாடகக் கலைஞர்கள் நம்மிடையே கூறுகையில், “கொரோனா என்னும் உயிர்க்கொல்லி நோய் தாக்கத்தின் காரணமாக ஏழை எளியவர்கள் முதல் செல்வந்தர்கள் வரை அனைவரின் வாழ்வாதாரத்தை புரட்டிப் போட்டது. தங்களை பொருத்தவரை திருவிழா காலங்களில் மட்டுமே தங்களின் வாழ்வாதாரம் என்பதால் இந்த பிரச்னை தொடர்பாக நாடக நடிகர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் மிகுந்த பாதிப்பிற்கு உள்ளானதாகமும்,

ஒரு வருடத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்று அதில் கிடைக்கும் வருவாயை வைத்து எஞ்சியுள்ள மாதங்களை கழித்து வந்ததாகவும், ஆனால் கடந்த ஆண்டு நிகழ்ந்த இந்த பேரிடர் காரணமாக தங்களது வாழ்வாதாரம் முற்றிலும் முடங்கி என்ன செய்வது என்று தெரியாமல் சொல்ல முடியாத துயரத்திற்கு உள்ளானதாகவும் தெரிவித்தனர். கடந்த ஒரு வருட காலமாக தமிழக முதலமைச்சர் அவர்கள் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு மாவட்டத்தின் நோயின் வீரியம் குறித்து கேட்டறிந்து பல்வேறு தளர்வுகள் உடன் ஊரடங்கு உத்தரவை நீடித்து வருகிறார்.


அதன் அடிப்படையில் தமிழக முதலமைச்சர் தற்போது தமிழகத்தில் விழாக் காலம் என்பதால் திருக்கோவில்களில் விழா நடத்த அனுமதி அளித்துள்ளார். அதனடிப்படையில் கிராம மக்கள் திருவிழாவை ஏற்பாடு செய்வது மட்டும் அல்லாமல் நாடகம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்து வருகின்றனர். அதன் அடிப்படையில் காவல்துறையினர் திருவிழாக்களில் நாடகம் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி வழங்காமல் இருப்பது தங்களது குடும்ப வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கும் நிகழ்வாகவே உள்ளது என்று வேதனையுடன் தெரிவித்த அவர்கள், தங்கள் வாழ்வாதாரம் பாதுகாத்திட தமிழக அரசு கூறும் அனைத்து கட்டுப்பாடுகளையும் கடைபிடித்து தாங்கள் மேடை நாடகங்கள் நடத்தவும், கலை நிகழ்ச்சிகள் நடத்தவும்,

சேலம் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து அவர்கள், தற்போது தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வருவதால் இதற்கும் தங்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் ,அதாவது இரவு 10 மணி வரை உள்ள நேரம் கட்டுப்பாட்டை நீடித்து இரவு 2 மணி வரை வழங்க அனுமதி வேண்டும், அதோடு மட்டுமல்லாமல் இதனை இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திற்கும் பரிந்துரை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை தாங்கள் முன்வைப்பதாகவும் நாடக நடிகர் மற்றும் நடிகைகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Views: - 0

0

0