பாலியல் தொல்லை புகார் எதிரொலி: தனியார் மனவளர்ச்சி குன்றியவர்களுக்கான இல்லத்தில் சோதனை

10 September 2020, 10:27 pm
Quick Share

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலம் ரெட்டியார் பாளையம் ஜவகர் நகரில் உள்ள தனியார் மனவளர்ச்சி குன்றியவர்கள் இல்லத்தில் பாலியல் தொல்லை நடைபெறுவதாக வந்த புகாரையடுத்து அவர்களை சமூகநலத்துறை அதிகாரிகள் மீட்க சென்ற போது மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள் வரமாட்டோம் என்று கூற மாடியில் நின்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

புதுச்சேரி மாநிலம் ரெட்டியார் பாளையம் ஜவகர் நகரில் தனியார் மனவளர்ச்சி குன்றியவர்கள் இல்லம் இயங்கி வருகிறது. இந்த இல்லத்தில் 30-க்கும் மேற்பட்ட மனவளர்ச்சி குன்றிய பெண் குழந்தைகள் உள்ளனர். இவர்களுக்கு இங்கு பாலியல் தொல்லைகள் கொடுக்கப்படுவதாக புதுச்சேரி அரசு சமூக நலத் துறைக்கு புகார் வந்தது. புகாரின் பேரில் சமூக நலத்துறை அதிகாரிகள், காவல்துறையினர் உதவியுடன் மனவளர்ச்சி குன்றியவர்கள் வசிக்கும் இல்லத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். மேலும் அங்குள்ள மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளை மீட்டு கொண்டுவர நடவடிக்கை எடுத்தனர்.

ஆனால் அங்கிருந்த மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள் 20-க்கும் மேற்பட்டோர் இல்லத்தின் மாடியில் ஏறி நின்று நாங்கள் இங்கிருந்து வரமாட்டோம் என்று கூறினர். இதனை அடுத்து போலீசார் அனைவரையும் மீட்டு வேறு ஒரு இல்லத்திற்கு அழைத்துச் சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் இந்த இல்லத்தில் பாலியல் வன்கொடுமை சம்பவம் நடைபெற்றதா, இல்லையா என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Views: - 0

0

0