கொரோனா தொற்று எதிரொலி: மண்பாண்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிப்பு

Author: Udhayakumar Raman
1 September 2021, 3:57 pm
Quick Share

தருமபுரி: தருமபுரி மாவட்டத்தில் கொரோனா தொற்று எதிரொலியால் விநாயகர் சிலைகளுக்கு ஆர்டர் கிடைக்காததால், மண்பாண்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்துக்களின் முக்கிய விழாக்களில் ஒன்றான விநாயகர் சதூர்த்தி நாடு முழுவதும் வெகுவிமர்சியாக கொண்டாடப்படுகிறது. இதே போல் தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக வடமாநிலங்களை போல் பிரமாண்ட விநாயகர் சிலைகளை வீட்டில் வைத்தும் பொது இடங்களில் வைத்தும், அனைவரும் விநாயகர் சதூர்த்தி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி தருமபுரி மாவட்டத்தில், அதியாமன்கோட்டை, பாப்பாரப்பட்டி, பென்னாகரம், பழைய தருமபுரி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 100 குடும்பத்திற்கும் மேற்பட்ட மண்பாண்ட தொழிலாளர்கள் ஆண்டுதோறும் விநாயகர் சதூர்த்திக்கு 4 மாதங்களுக்கு முன்பிருந்தே இரவு பகலாக சிலை செய்யும் பணியை துவங்கி விடுவார்கள்.

தருமபுரி மாவட்டத்தில் தயாரிக்கப்படும் சிலைகளை தருமபுரி மாவட்டம் மட்டும் அல்லாமல் அண்டை மாவட்டங்களான சேலம், மேட்டூர், கிருஷ்ணகிரி, ஒசூர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து ஆர்டரின் பெயரில் வினாயகர் சதூர்த்தி சீசனுக்கு சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிலைகள் தயாரிக்கப்படுவார்கள். தருமபுரி மாவட்டத்தில், மண்பாண்ட தொழில் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வரும் நிலையில் இம்மாவட்டத்தில் சில குடும்பத்தினர் மட்டும் பரம்பரை தொழிலாக செய்து வருகின்றனர். இதே போல் இந்தாண்டும் விநாயகர் சதூர்த்தையொட்டி கடந்த 4 மாதங்களுக்கு முன்பு மண்பாண்ட தொழிலாளர்கள் கடன் வாங்கி மண் மற்றும் தேவையான மூலப்பொருட்களை வாங்கி சிலைகள் செய்யும் பணியை துவங்கினர்.

இந்நிலையில் கொரோனா தொற்று காரணமாக விநாயகர் சதூர்த்தி விழா கொண்டாடப்படுவது கேள்வி குறியாக இருந்த நிலையில், பொது இடங்களில் சிலை வைத்து கொண்டாட கூடாது என தமிழக அரசின் அறிவிப்பால் வெளி மாவட்ட வியாபாரிகள் மற்றும் பக்தர்கள் யாரும் விநாயகர் சிலைகளை ஆர்டர் செய்யாமல் உள்ளனர். இதனால் ஒரு சில மண்பாண்ட தொழிலாளர்கள் வினாயகர் சிலை செய்வதை நிறுத்திவிட்டு மாற்று பணிக்கு சென்றுள்ளனர். கொரோனா தொற்று குறையும் என்கிற நம்பிக்கையிலும், பொதுமக்கள் சிலைகள் வாங்க வருவார்கள் என்ற நம்பிக்கையிலும் வீடுகளில் வைத்து பூஜைகள் செய்யும் அளவிற்கு சிறியளவிலான சிலைகளை மண்பாண்ட தொழிலாளர்கள் செய்து வருகின்றனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக விநாயகர் சிலை தயாரிக்கும் தொழில் பாதிக்கப்பட்டுள்ளதால் மண்பாண்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக கவலையடைந்துள்ளனர்.

Views: - 166

0

0