பாஜக தனித்து நின்றாலும் 60 இடங்களில் வெற்றி வாய்ப்பை பெறும்: தமிழக பாஜக தலைவர் முருகன் பேட்டி

31 August 2020, 7:34 pm
Quick Share

திருச்சி: பாஜக தனித்து நின்றாலும் 60 இடங்களில் வெற்றி வாய்ப்பை பெறும் என திருச்சியில் தமிழக பாஜக தலைவர் முருகன் தெரிவித்துள்ளார்.

திருச்சி கருமண்டபம் ஆக்ஸ்போர்ட் பொறியியல் கல்லூரியில் தமிழக பாஜகவின் இளைஞர் அணி மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள வந்த அக்கட்சியின் மாநில தலைவர் முருகன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “அதிமுக-பாஜக உறவு சுமுகமாக உள்ளது. கடந்த தேர்தலில் 60 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பை இழந்தவர்களின் கணக்கெடுத்தால் உண்மை நிலவரம் புரியும்.

வரும் சட்ட மன்ற தேர்தலில் அந்த 60 தொகுதிகளில் பாஜக தனித்து போட்டியிட்டால் வெற்றி பெறும் வாய்ப்பு உள்ளது. புதிய கல்விக் கொள்கையில் இடம்பெற்றுள்ள மும்மொழி திட்டமானது ஏற்கனவே தமிழகத்தில் உள்ள மெட்ரிக், சிபிஎஸ்இ, பள்ளிகளில் உள்ளது. அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு மற்றொரு மொழியை பயிலும் வாய்ப்பு மறுக்கப்பட்டு வந்தது.

தற்போது புதிய கல்விக் கொள்கையின் மூலமாக அந்த வாய்ப்பு அரசு பள்ளி மாணவர்களுக்கும் கிடைத்திருக்கிறது. குறிப்பாக தாழ்த்தப்பட்ட ஏழை எளிய மாணவர்களுக்கு இத்திட்டமானது சென்றடைய வேண்டும். இதனை அரசியலாக்க வேண்டாம். திமுகவினர் நடத்தும் பள்ளிகளில் தான் மும்மொழிக் கல்வியானது கடைபிடிக்கப்படுகிறது. இதில் திமுகவினர் இரட்டை வேடம் போடுகின்றனர் எனவே அந்த பள்ளிகள் முன்பாக பாஜக இளைஞர் அணியினர் போராட்டத்தில் ஈடுபடுவார்கள், என்றார்.

Views: - 8

0

0