மற்றொரு விவசாயி மின்வேலியில் சிக்கி உயிரிழப்பு

22 September 2020, 4:32 pm
Quick Share

காஞ்சிபுரம்: உத்தரமேரூரில் மற்றொரு விவசாயி மின்வேலியில் சிக்கி உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் பகுதியில் எல்.எண்டத்தூர் கிராமத்தில் கோபி என்பவர் விவசாயம் செய்து வருகிறார். மேற்படி இவருடைய நிலமானது சிறிய மலைக் குன்றின் அடிவாரத்தில் உள்ளது. இதனால் அப்பகுதியில் காட்டுப்பன்றிகள் அதிக அளவில் பயிர்களை நாசம் செய்வதால் பன்றிகளிடம் இருந்து பயிர்களை காக்க மின்சார வேலியை பயன்படுத்தி வந்துள்ளார். இந்நிலையில் கோபி விவசாயம் செய்து கொண்டிருக்கும் பொழுது விலங்குகளுக்காக வயலில் போடப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி உயிரிழந்தார்.

இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வன விலங்குகளிடம் இருந்து விவசாய பயிர்களை பாதுகாக்க விவசாய நிலங்களை சுற்றி விவசாயிகள் தன்னிச்சையாக மின்வேலி அமைத்து வருகின்றனர். இதில் கால்நடைகள் மட்டுமல்லாது பொதுமக்களும் சிக்கி இறந்து போகின்றனர். நேற்று காலை உத்திரமேரூரில் முனியப்பன் என்கின்ற 30 வயது நபர் மின்சார வேலியில் சிக்கி உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது