விவசாயிகளை மகிழ்ச்சியில் உறைய வைத்த உருளைக்கிழங்கு

25 September 2020, 3:12 pm
Quick Share

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் நீண்ட நாட்களுக்கு பின் உருளைக்கிழங்கின் விலை அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மலை மாவட்டமான நீலகிரியில் மாவட்டத்தில் தேயிலைக்கு அடுத்தபடியாக மலை காய்கறிகள் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகின்றன. குறிப்பாக, இங்கு உருளைக்கிழங்கு, கேரட், பீட்ரூட், பீன்ஸ், பூண்டு முட்டைகோஸ் உள்ளிட்ட மலை காய்கறிகள் அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இங்கு சாகுபடி செய்யப்படும் மலை காய்கறிகள் மேட்டுப்பாளையம், கோவை, சென்னை உள்ளிட்ட பகுதிகள் மட்டுமின்றி வெளி மாநிலங்களுக்கும் அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

இந்த ஆண்டு நீலகிரியில் பருவ மழையின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டுள்ளதால் மலை காய்கறி விவசாயத்தில் உருளைகிழங்கு விவசாயம் 3 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ளது. மேலும் கடந்த சில ஆண்டுகளாக போதிய விலை கிடைக்காமலும் காலநிலையில் ஏற்பட்ட மாற்றத்தால் உருளைகிழங்கு விவசாயம் 30 சதவீதம் குறைந்தது. இதனால் உருளைக்கிழங்கு விவசாயம் சற்று பாதிப்படைந்த நிலையில் வரத்து குறைவு காரணமாக கடந்த சில நாட்களாக உருளைக்கிழங்கின் விலை அதிகரித்து கிலோ 50 முதல் 80 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதால் விவசாயிகள்  மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதனால் மாவட்டத்தில் பல பகுதிகளில் பயிரிடப்பட்டிருந்த உருளைகிழங்குகளைஅறுவடை செய்யும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.