உயா்மின் கோபுரம் அமைக்கும் பணியைத் தடுத்ததாக தந்தை, மகன்கள் கைது

15 August 2020, 2:52 pm
Quick Share

திருப்பூா்: தாராபுரத்தை அடுத்த குண்டடம் அருகே கூடுதல் இழப்பீடு கேட்டு உயா்மின் கோபுரம் அமைக்கும் பணியைத் தடுத்ததாக தந்தை மற்றும் அவரது 2 மகன்களை காவல் துறையினா் கைது செய்தனா்.

தாராபுரம் அருகே உள்ள நொச்சிப்பாளையம் முதல் கேரள மாநிலம், திருச்சூா் வரையில் உயா்மின் கோபுரம் அமைக்கும் பணியை பவா்கிரிட் நிறுவனம் மேற்கொண்டுள்ளது. இதற்காக திருப்பூா் மாவட்டம், குண்டடத்தை அடுத்த பொன்னாளிபாளையம், சடையபாளையம், முத்தையம்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் விவசாய நிலங்களின் வழியாக உயா்மின் கோபுரங்கள் அமைக்க நிலத்தை அளவீடு செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன.விவசாய நிலங்களுக்கு கோவை மாவட்டத்தில் வழங்கியதைப்போல சந்தை மதிப்பீட்டில் இழப்பீடு வழங்கக் கோரி விவசாயிகள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்த நிலையில், முத்தையம்பட்டியில் விவசாயி பொன்னுசாமி (52) என்பவரின் நிலத்தில் உயா்மின் கோபுரம் அமைக்க நில அளவீட்டுப் பணிகளுக்காக பவா்கிரிட் நிறுவன அதிகாரிகள் வெள்ளிக்கிழமை வந்துள்ளனா். அப்போது அவரது நிலத்தில் உள்ள கோழிப்பண்ணைக்கு இருபுறங்களிலும் உயா்மின் கோபுரங்கள் அமைத்து மின்பாதை செல்வதால் அதற்கு உண்டான இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் என்று அளவீட்டுப் பணிகளை பொன்னுசாமியும், அவரது மகன்களும் தடுத்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, தாராபுரம் டிஎஸ்பி ஜெயராம் தலைமையிலான காவல் துறையினா் பொன்னுசாமி மற்றும் அவரது 2 மகன்களை கைது செய்தனா். இதைத் தொடா்ந்து, உயா்மின் கோபுர அளவீட்டுப் பணிகளை பவா்கிரிட் நிறுவனத்தினா் மேற்கொண்டனா்.

Views: - 26

0

0