தனியாருக்கு சொந்தமான நூற்பாலையில் தீ விபத்து:பல லட்சம் மதிப்பிலான பஞ்சு மூட்டைகள், இயந்திரங்கள் எரிந்து சேதம்…

Author: Udhayakumar Raman
13 September 2021, 6:29 pm
Quick Share

திருப்பூர்: பல்லடம் அருகே தனியாருக்கு சொந்தமான நூற்பாலையில் தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பஞ்சு மூட்டைகள், இயந்திரங்கள் எரிந்து சேதம் அடைந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் தாராபுராம் சாலை தண்ணீர் பந்தலில் திருப்பூரை சேர்ந்த அரவிந்த் சிவக்குமார் என்பவருக்கு சொந்தமான நூற்பாலை இயங்கி வருகிறது.இதில் வட மாநில மற்றும் தென் மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தங்கி வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் அந்த நூற்பாலையில் நூலாக மாற்றுவதற்கு பஞ்சு மூட்டைகள் சேகரித்து வைக்கப்பட்டிருந்தன. இன்று வழக்கம் போல நூற்பாலையில் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர்.அப்பொழுது பஞ்சை நூலாக மாற்றும் ப்ரீ ஓப்பன் இயந்திரத்தில் இருந்து புகை வெளியேறியது.அதனை தொடர்ந்து திடீரென இயந்திரத்தில் தீப்பற்றி எரிந்தது.

தொழிலார்ள் தீயை அணைக்க முயன்றனர்.ஆனால் அங்கு அடுக்கி வைக்கப்பட்டிருந்த பஞ்சு மூட்டையில் தீ மளமளவென பரவியது.இதனை அடுத்து பல்லடம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர்.தகவல் கிடைத்து சம்பவ இடம் வந்த தீயணைப்பு துறையினர் நூற்பாலையின் லாரிகள் மூலமாக தண்ணீரை பீச்சி அடித்து 30 நிமிடங்களாக போராடி தீ பரவாமல் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.இந்த தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பஞ்சு மூட்டைகள்,பஞ்சை நூலாக மாற்றும் ப்ரீ ஓப்பன் இயந்திரங்கள், மற்றும் கட்டிடங்கள் முழுவதுமாக எரிந்து சேதமடைந்தன.இந்த தீ விபத்து குறித்து காமநாயக்கன் பாளையம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Views: - 498

0

0