தமிழகத்தில் முதல் இடம் பிடித்த ஊராட்சி: விருது வழங்கிய மத்திய அரசு.!

Author: Udayaraman
28 July 2021, 8:16 pm
Quick Share

கோவை: கோவை மாவட்டம் முத்துக்கவுண்டன் புதூர் ஊராட்சி பசுமையான ஊரட்சியாக உள்ளமைக்காக மத்திய அரசின் தீன் தயாள் உபாத்தியாய் பஞ்சாயத் சஸ்ஹகித்திகரன் புரஸ்கர் எனும் விருது பெற்று சாதனை படைத்துள்ளது.

கோவை சூலூர் அருகே உள்ள முத்துக்கவுண்டன்புதூர் ஊராட்சிக்கு உட்பட்டு அண்ணாநகர், முதலிபாளையம், குரும்பபாளையம், முத்துக்கவுண்டன்புதூர், காளியாபுரம் ஆகிய கிராமங்கள் உள்ளன. முன்பு, இங்குள்ள பெரும்பாலான வீடுகளில் கழிப்பிட வசதி இல்லாததால், முதலிபாளையத்தில் மந்தைவெளி புறம்போக்காக இருந்த சுமார் 3.75 ஏக்கர் நிலத்தை, திறந்தவெளி கழிப்பிடமாக மக்கள் பயன்படுத்தி வந்துள்ளனர். சீமைக்கருவேல முட்கள் வளர்ந்து, பள்ளமும், மேடுமாக பாலைவனம்போல் காட்சியளித்த அந்த இடம் தற்போது பசுஞ்சோலைபோல மாறியுள்ளது. ஊராட்சி தலைவர் கந்தவேல் முயற்சியினால் நர்சரியில் பூவரச மரம், செம்மயிற் கொன்றை, புளியமரக்கன்றுகளை உருவாக்கி மற்ற ஊராட்சிகளுக்கு விநியோகம் செய்து வருகின்றனர்.

டெங்கு பரவிய காலத்தில் வீடுகளுக்கு கொசுக்கள் வராமல் தடுக்க, 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நொச்சி செடிகளை வளர்த்து, விநியோகித்துள்ளனர். 3,500 பலவகை மரங்களில் இருந்து கொய்யா, மாதுளை, நெல்லிகாய், சப்போட்டா ஆகியவற்றை ஒருமுறை அறுவடை செய்துள்ளனர். தற்போது மா, பலா, கொய்யா, சப்போட்டா, சீத்தாபழம், நெல்லிக்காய், நாவல்பழம், சிவப்பு மாதுளை ஆகியவை காய்த்துள்ளன. இதுதவிர, எலுமிச்சை, பாதாம், பென்சில் மூங்கில், நீர் மருது, மகிழம், ரோஸ்மேரி, சரக்கொன்றை, இலுப்பை, வேப்பமரம், புங்கமரம், அரசமரம் உள்ளிட்ட நாட்டு மரங்களும் உள்ளன.

பழ வகை மரங்கள், இதர மரங்கள் என மொத்தம் சுமார் 3,500 மரங்கள் உள்ளதால், இப்பகுதி ஆக்சிஜன் உற்பத்தி மையமாகவும் திகழ்கிறது. தமிழகத்தில் உள்ள 6 சிறந்த ஊரட்சிக்கு மத்திய அரசு விருது வளங்கியுள்ளதாகவும் அதில் கடந்த அதிமுக ஆட்சியில் பசுமையான ஊரட்சியாக முத்துகவுண்டன்புதூர் ஊரட்சியை மாற்றியமைக்கு மத்திய அரசு தீன் தயாள் உபாத்தியாய் பஞ்சாயத் சஸ்ஹகித்திகரன் புரஸ்கர் எனும் விருது வழங்கியுள்ளது. இதனால் இந்த ஊராட்சி பொதுமக்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Views: - 88

0

0