வழிப்பறி செய்த 4 கொள்ளையர்கள் 4 மணி நேரத்தில் கைது

11 August 2020, 11:06 pm
Quick Share

காஞ்சிபுரம்: சோமங்கலம் அருகே பொறியாளர்களை கத்தியால் தாக்கி செல்போன்களை வழிப்பறி செய்த 4 கொள்ளையர்களை 4 மணி நேரத்தில் ஏஎஸ்பி கைது செய்தார்.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் பகுதியை சேர்ந்த சுரேஷ் தேனாம்பேட்டை பகுதியைச் சேர்ந்த பார்த்தசாரதி ஆகிய இருவரும் பொறியாளர்கள். ராயப்பா நகரில் இவர்கள் தலைமையில் கட்டட பணி நடைபெற்று வருகின்றது. அதை முடித்துவிட்டு சோமங்கலத்தில் உணவு அருந்திவிட்டு நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது இரண்டு உயர் ரக இருசக்கர வாகனத்தில் முக கவசம் அணிந்து வந்த மர்ம நபர்கள் இருவரையும் கத்தியால் தாக்கிவிட்டு அவர்களிடமிருந்து விலையுயர்ந்த செல்போன்களை பறித்துக் கொண்டு தப்பி சென்றது.

இதேபோல் சென்னை கூடுவாஞ்சேரி பகுதியைச் சேர்ந்த அரிகிருஷ்ணன் மற்றும் சேகர் ஆகிய இருவரையும் கத்தியால் தாக்கிவிட்டு செல்போனை பறித்து கொண்டு தப்பி சென்றது. நள்ளிரவில் இரண்டு இடங்களில் நடைபெற்ற கொள்ளை சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் காவல் நிலையத்தில் அளித்திருந்தனர். அதன்பேரில் ஸ்ரீபெரும்புதூர் சரக காவல் உதவி கண்காணிப்பாளர் கார்த்திகேயன் தலைமையில் கத்திமுனையில் வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்ட போரூர் பகுதியைச் சேர்ந்த ஆகாஷ், பெரம்பூர் பகுதியைச் சேர்ந்த தீனா, கூடுவாஞ்சேரி பகுதியைச் சேர்ந்த நீலகண்டன், மாங்காடு பகுதியை சேர்ந்த முருகேசன் ஆகிய 4 பேரையும் சென்னை மவுலிவாக்கம் பகுதியில் சினிமா பாணியில் மடக்கி பிடித்தனர்.

புகார் அளித்த நான்கு மணி நேரத்தில் பிரபல ரவுடிகளை ஏஎஸ்பி கார்த்திகேயன் மற்றும் உதவி ஆய்வாளர் விஜயகாந்த் ஆகியோர் மடக்கி பிடித்து அதிரடியாக கைது செய்தனர். மேலும் கைது செய்யப்பட்ட 4 பேரிடம் இருந்து வழிப்பறிக்கு பயன்படுத்திய இரண்டு உயர் ரக இருசக்கர வாகனங்கள், இரண்டு பட்டா கத்திகள், 6 செல்போன்கள் உள்ளிட்டவைகளை கைப்பற்றி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். புகார் அளித்த 4 மணிநேரத்தில் விரைந்து செயல்பட்ட தனிப்படை காவல் துறையினருக்கு பல்வேறு தரப்பினரிடமிருந்து பாராட்டுகள் குவிந்து வருகிறது.

Views: - 7

0

0