கிளைவாய்க்கால் மதகில் உடைப்பு: விவசாய நிலத்திற்குள் புகுந்த நீர்…

25 August 2020, 6:06 pm
Quick Share

ஈரோடு: கோபிச்செட்டிப்பாளையம் அருகே கிளைவாய்க்கால் மதகில் உடைப்பு ஏற்பட்டதால் விவசாய நிலத்திற்குள் நீர் புகுந்ததையடுத்து மணல் மூட்டைகள் கொண்டு அடைப்பை சரிசெய்யும் பணியில் பொதுப்பணித்துறையினர் ஈடுபட்டனர். ‌

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையிலிருந்து கடந்த 14ம் தேதி கீழ்பவானி பிரதான கால்வாய்க்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 1 லட்சத்து 3,500 ஏக்கர் நிலம் நேரடியாக பாசன வசதி பெறுகிறது. கீழ்பவானி பிரதான கால்வாயிலிருந்து பாசனத்திற்காக கிளை வாய்க்கால்களுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இந்நிலையில் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள செம்மாண்டாம்பாளையம் கிளை வாய்க்காலில் உள்ள மதகில் ஏற்பட்ட பழுது காரணமாக மதகு உடைந்து அதிகளவு தண்ணீர் வெளியேறியது.

இதனையடுத்து சம்பவம் குறித்து வருவாய் துறை மற்றும் பொதுப்பணித்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் தற்காலிகமாக மணல் மூட்டைகள் மற்றும் மூங்கில் மூலம் தண்ணீர் வெளியேறுவதை நிறுத்தினர். அதற்குள் கரையை ஒட்டியுள்ள விவசாய நிலத்திற்குள் நீர் புகுந்தது. மேலும் கடந்த ஆண்டே மதகில் பழுது ஏற்பட்டுள்ளதாகவும், குடிமராமத்து பணி மூலம் சரி செய்ய கோரிக்கை விடுத்தும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் அலட்சியமாக இருந்ததால் இத்தகைய சம்பவம் ஏற்பட்டுள்ளதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.