திருச்சியில் செயல்படும் எல்ஃபின் நிறுவனம் மீது மோசடி புகார்: அலுவலக நுழைவு வாயிலில் பெண் தர்ணா போராட்டம்

Author: Udhayakumar Raman
25 June 2021, 3:31 pm
Quick Share

திருச்சி: திருச்சியில் செயல்படும் எல்ஃபின் நிறுவனம் மீது மோசடி புகார் கூறிய சிவகாசி ஜெயலட்சுமி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

திருச்சி மன்னார்புரம் பகுதியில் எல்ஃபின் என்ற மல்டி லெவல் மார்க்கெட்டிங் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனம் கவர்ச்சிகரமான வட்டி வழங்கும் திட்டங்களை அறிவித்தது. இதை நம்பி ஆயிரக்கணக்கானோர் கோடிக்கணக்கான ரூபாயை இந்நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளனர். ஆனால் உறுதி அளித்தபடி இந்நிறுவனம் வட்டியையும், பணத்தையும் திரும்ப கொடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிறுவனம் சார்பில் முதலீட்டாளர்களுக்கு கொடுக்கப்பட்ட காசோலை களையும் வங்கியில் சமர்ப்பிக்க வேண்டாம் என்று நிறுவனத்திலிருந்து தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த முதலீட்டாளர்கள் அலுவலகத்திற்கு அலையாய் அலைந்து வருகின்றனர். எனினும் நிறுவனம் சார்பில் பணமும் கொடுக்கப்படவில்லை, உரிய பதிலும் அளிக்கப்படவில்லை என்று முதலீட்டாளர்கள் புலம்பி வருகின்றனர்.

இந்நிலையில் திருச்சி பிராட்டியூரை சேர்ந்தவர் மிதுன் சமேஷ். இவர் திருச்சி மாநகர காவல்துறை கமிஷனரிடம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில், திருச்சி மன்னார்புரம் அருகே கல்லுகுழியில் உள்ள எல்பின் கம்பெனி பிரைவேட் லிமிடெட் என்ற பெயரில் மல்டி லெவல் மார்க்கெட்டிங் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தின் கவர்ச்சிகரமான விளம்பரங்களை நம்பி நேரடியாகவும், ஆன்லைன் மூலமாகவும் 72 லட்சத்து 82 ஆயிரத்து 500 ரூபாய் முதலீடு செய்தேன். 10 மாதம் கழித்து மூன்று மடங்காக திருப்பி தருவதாக அந்நிறுவனத்தின் உரிமையாளர்கள் ராஜா , ரமேஷ் ஆகியோர் உறுதி அளித்தனர். அதன் பின்னர் என்னையும் அவர்கள் மூளை சலவை செய்து ஆட்களை இத்திட்டத்தில் சேர்த்து விடும்படி கூறினார்கள்.

இதைடுத்து உறவினர்கள் 10 பேரை இந்நிறுவனத்தில் பணம் செலுத்த செய்தேன். இந்த வகையில் மொத்தம் 2 கோடியே 18 லட்சத்து 98 ஆயிரத்து 500 ரூபாய் செலுத்தினோம். திட்டத்தின் கால கெடு முடிவடைந்த நிலையில் பணம் கேட்டு சென்ற போது தகாத வார்த்தைகளால் திட்டினர். நிறுவனத்தினர் கொடுத்த காசோலையையும் பறித்துக்கொண்டு என்னை அடித்து விரட்டினர். அதனால் இந்நிறுவனத்தில் செலுத்திய பணத்தை பெற்று தருவதோடு , என்னை கொலை செய்ய முயற்சித்த நிறுவன அதிபர்கள் ராஜா, இவரது சகோதரர் ரமேஷ் , இளங்கோவன், பால்ராஜ், அறிவுமணி, சாகுல் ஹமீது, மதிவாணன், ராஜப்பா, பாதுஷா உள்ளிட்ட 10 பேர் மீது வழக்குப் பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில் சில ஆண்டுகளுக்கு முன்பு காவல்துறையில் பணியாற்றிய ஏட்டு முதல் உயர் அதிகாரிகள் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை சுமத்திய சிவகாசி ஜெயலட்சுமி இன்று திருச்சி மன்னார்புரத்தில் உள்ள எலஃபின் அலுவலகத்திற்கு வந்தார். இவரும் இந்நிறுவனத்தில் முதலீடு செய்திருப்பதாக தெரிகிறது. அதனால் நிறுவனத்தினர் பணத்தை உடனடியாக திரும்ப வழங்க வேண்டும். அதுவரைக்கும் வீட்டிற்கு செல்லமாட்டேன் என்று கூறி அலுவலக நுழைவு வாயிலில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

காவல்துறையினருக்கு எதிராக பரபரப்பு குற்றச்சாட்டுகளை கூறிய சிவகாசி ஜெயலட்சுமி தற்போது எல்ஃபின் நிறுவனத்திற்கு எதிராக களம் இறங்கியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதேபோல் நிறுவனத்தில் முதலீடு செய்த நூற்றுக்கணக்கானோர் அலுவலகத்திற்கு திரண்டு வருவார்கள் என்ற அச்சம் எழுந்துள்ளதால் அங்கு காவல்துறை குவிக்கப்பட்டு வருகின்றனர்.

Views: - 386

0

0