போலி ஆவணங்கள் கொடுத்து 3 வங்கிகளில் மோசடி: கணவன் மற்றும் மனைவி கைது

29 November 2020, 7:45 pm
Quick Share

ஈரோடு: போலி ஆவணங்கள் கொடுத்து 3 வங்கிகளில் 48 லட்சம் ரூபாய் கடன் பெற்று மோசடி செய்த கணவன் மற்றும் மனைவியை ஈரோடு குற்றபிரிவு போலீசார் கைது செய்தனர்.

ஈரோடு ஆசிரியர்காலனியை சேர்ந்தவர் கார்த்தி அவரது மனைவி ராதிகா. தனியார் காப்பீட்டு நிறுவனத்தில் மேலாளராக ராதிகா பணிபுரிவதாக கூறி, வில்லரசம்பட்டி கனரா வங்கியை அணுகிய இருவரும், அடையாள அட்டை, ஊதிய சான்று, வருமான வரி செலுத்திய ஆவணங்களை சமர்பித்து 19 லட்சம் ரூபாய் கார் வாங்குவதற்கான கடன் பெற்றனர். அதன் பின் காரின் ஆவணங்களை வங்கியில் சமர்பிக்கவில்லை. பல முறை தொடர்பு கொண்டும் பதிலளிக்காததால் சந்தேகமடைந்த வங்கி மேலாளர், ஈரோடு மாவட்ட குற்றபிரிவு போலீசில் புகார் அளித்தார்.

இதன் பேரில் போலீசார் நடத்திய விசாரணையில், இந்த தம்பதியினர், போலி ஆவணங்களை தயாரித்து மோசடி செய்திருப்பதும், திண்டல் இந்தியன் ஓவர் சீஸ் வங்கியில் இதே போல் கார் கடனாக 15 லட்சமும், மேட்டுக்கடை இந்தியன் வங்கியில் தனிநபர் கடனாக 14 லட்சம் என மொத்தம் 48 லட்சம் ரூபாய் மோசடியாக கடன் பெற்றதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து இரண்டு கார்களையும், 56 ஆயிரம் ரூபாய் ரொக்க பணத்தையும் பறிமுதல் செய்தனர்.கைது செய்யப்பட்ட இருவரையும் போலீசார் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

Views: - 0

0

0