அரசு நிலத்தை மோசடியாக பட்டா மாற்றம்:பெண் கிராம நிர்வாக அலுவலர் பணியிடை நீக்கம்

Author: Udayaraman
9 October 2020, 9:41 pm
Quick Share

அரியலூர்; அரசு நிலத்தை மோசடியாக பட்டா மாற்றம் செய்துகொடுத்த பெண் கிராம நிர்வாக அலுவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

அரியலூர் மாவட்டம் கடுகூர் கிராமத்தை சேர்ந்த தனவேல் என்பவரின் மகள் ராணி. இவர் அரியலூர் மாவட்டம் காவனூர் கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் ராணியின் தந்தை கடுகூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமிப்பு செய்து வீடு கட்டியுள்ளதாக கூறப்பட்டது. மேலும் ஆக்கிரமிப்பு செய்த இடத்திற்கு பட்டா மாற்றம் செய்துதர தனது மகளை அணுகியுள்ளார். அப்போது ராணி கடுகூர் கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலராக இருந்த சரஸ்வதியின் கையெழுத்து மற்றும் முத்திரையை மோசடியாக தயார் செய்து வருவாய்த் துறையினர் மூலம் பட்டா மாற்றம் செய்துள்ளார்.

இதுகுறித்து கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் ரத்னாவிடம் புகார் செய்தனர். புகாரின் பேரில் உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கும்படி வருவாய் துறையினருக்கு மாவட்ட ஆட்சியர் ரத்னா உத்தரவிட்டார். விசாரணையில் கடுகூர் கிராம நிர்வாக அலுவலரின் கையெழுத்து மற்றும் முத்திரையை ராணி மோசடியாக பயன்படுத்தி பட்டா மாற்றம் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து மோசடியாக பட்டா மாற்றம் செய்ய உடந்தையாக இருந்த கிராம நிர்வாக அலுவலர் ராணியை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் ரத்னா உத்தரவிட்டார்.

இந்நிலையில் கடுகூர் கிராம நிர்வாக அலுவலர் சரஸ்வதியின் கையெழுத்து மற்றும் முத்திரையை எப்படி ராணி பயன்படுத்தினார் அதற்கு சரஸ்வதியும் உடந்தையா என்பது குறித்தும் வருவாய்த்துறையினர் மேற்கொண்டு விசாரணை செய்து வருகின்றனர்.

Views: - 37

0

0