கோவையில் ஏழைகளுக்கு இலவச கொரோனா தடுப்பூசி முகாம் : தன்னார்வலர்கள் உதவி!!

6 July 2021, 6:17 pm
Quick Share

கோவை: கோவையில் ஏழை மக்களுக்கு தன்னார்வலர்கள் மற்றும் மாணவர்கள் சார்பில் இலவசமாக கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

கோவை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் குறைந்து வரும் நிலையில் தடுப்பூசி செலுத்திக்கொள்ள மக்கள் அதிக அளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர் ஆனால் மாவட்டத்தில் போதிய அளவில் தடுப்பூசி இருப்பு இல்லை.

இந்நிலையில் கூடு என்ற தன்னார்வ அறக்கட்டளையும் கல்லூரி மாணவர்கள் இணைந்து உருவாக்கிய ‘கோயம்புத்தூர் கோவிட் எய்ட்’ என்ற அமைப்பும் இணைந்து கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள ஏழை மக்களுக்கு இலவசமாக தடுப்பூசி முகாம் நடத்தினர். இதில் சுமார் 300 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

இதுகுறித்து கூடு தன்னார்வ அறக்கட்டளையின் செயலாளர் கதிரேசன் கூறுகையில், “கூடு அறக்கட்டளை மற்றும் கோயம்புத்தூர் கோவிட் எய்ட் அமைப்பு இணைந்து திருப்பூர் மற்றும் மாவட்டங்களுக்கு ஆக்சிஜன் சிலிண்டகள் வழங்கியது, கொரோனா தடுப்பு மற்றும் சிகிச்சைக்கான உபகரணங்கள் வழங்கியது உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களை மேற்கொண்டு வருகிறோம்.

இன்று ஏழை மக்களுக்கு தடுப்பூசி முகாம் ஏற்பாடு செய்துள்ளோம். மக்களுக்கு முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதற்கான சான்றிதழை பெற்றுக் கொடுத்து அடுத்த டோஸ் தடுப்பூசி செலுத்தவும் ஏற்பாடு செய்வோம். அதோடு, இன்று மக்களுக்கு நிவாரண பொருட்களையும் வழங்கினோம்.” என்றார்.

தொடர்ந்து கோயம்புத்தூர் கோவிட் எய்ட் அமைப்பின் செய்தி தொடர்பாளர் அத்விதா கூறுகையில், ” பல்வேறு கல்லூரிகளில் பயிலும் மாணவர்களான நாங்கள் ஒன்றிணைந்து கொரோனா காலத்தில் ரூ. 10 லட்சம் நிதி திரட்டினோம். அதன் மூலம் மக்களுக்கு உதவி செய்து வருகிறோம். திருப்பூர் மாவட்டத்தில் எங்கள் அமைப்பு ஏழை மக்களுக்கு உதவியதோடு, அரசு மருத்துவமனைக்கும் உதவியது. இளைஞர்களின் முன்னெடுப்பு தேவை என்பதை கருத்தில் கொண்டு இந்த அமைப்பு துவங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து செயல்படுவோம் என்றார்.

Views: - 82

0

0