இரவு நேரத்தில் தோட்டத்திற்குள் புகுந்து திருடும் கும்பல் : மின் மோட்டார் வயர்களை திருடிய 3 பேர் கைது!!

Author: Udayaraman
26 July 2021, 5:35 pm
Dharapuram Arrest - Updatenews360
Quick Share

திருப்பூர் : தாராபுரம் அருகே செங்கல் சூலை தொழிலாளிகள் ஒரு லட்சம் மதிப்புள்ள காப்பர் வயர்களை திருடிய வழக்கில் 3 பேர்களை அலங்கியம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்த அலங்கியம் பகுதியில் சுந்தர்ராஜன் என்பவருக்கு சொந்தமான செங்கல் சூளை ஒன்று செயல்பட்டு வருகிறது.

அந்த செங்கல் சூளையில் கடலூர் பகுதியை சேர்ந்த வெற்றிவேல் (வயது 29)மற்றும் அசோக்குமார்(வயது 35),விழுப்புரத்தை சேர்ந்த சிவகுமார்(வயது 39) ஆகியோர் சுந்தரராஜ் செங்கல் சூளையில் மூவரும் கூலித் தொழிலாளிகளாக குடும்பத்துடன்தங்கி வேலை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் இரவு மூவரும் ஒரே மோட்டார் சைக்கிளில் பெரிச்சிபாளையம் சென்று மது வாங்கி அருந்தியுள்ளனர். பிறகு மூன்று பேரும் மோட்டார் சைக்கிளில் செங்கல் சூலைக்கு வரும் வழியில் இரவு 8 மணிக்கு கொங்கூர் அருகே நின்று பேசிக் கொண்டிருந்தனர்.

அப்போது அதே பகுதியை சேர்ந்த பெரியசாமி என்பவர் அவருடைய தோட்டத்திலிருந்து வீட்டுக்கு செல்ல மோட்டார் சைக்கிளில் வெளியே வந்தார். அப்போது மூவர் பேசிக் கொண்டிருந்ததை பார்த்து நீங்கள் எந்த ஊர், ஏன் இங்கு நிற்கிறீர்கள் என கேட்டார்.

அப்போது நாங்கள் மூவரும் அருகில் உள்ள செங்கல் சூளையில் குடும்பத்துடன் வேலை பார்த்து வருவதாக பெரியசாமியிடம் கூறினர். இதனால் பெரியசாமி கிளம்பி வீட்டுக்கு சென்றுவிட்டார்.

காலையில் தனது விவசாய நிலங்களுக்கு தண்ணீர் பார்ப்பதற்காக மின்மோட்டார் போடுவதற்காக சென்றார். அப்போது மின்மோட்டார் இயங்கவில்லை பிறகு பார்த்தபோது அங்குள்ள மின் மோட்டாருக்கு செல்லும் வயர்கள் துண்டிக்கப்பட்டு திருட்டு போனது தெரிய வந்தது.

அதே போன்று அதன் அருகிலுள்ள செந்தில்குமார் என்பவர் தோட்டத்திலும் மின் மோட்டாருக்கு செல்லும் வயர்கள் திருட்டு போனது. இது குறித்து பெரியசாமி மற்றும் செந்தில்குமார் இருவரும் அலங்கியம் போலீசில் புகார் கொடுத்தனர்.

புகாரின் பேரில் நேற்று இரவு மூவர் தனது தோட்டத்தில் நின்று கொண்டிருந்தததும், அவர்கள் செங்கல் சூளை தொழிலாளிகள் என பெரியசாமி போலீசாரிடம் தெரிவித்தார். அதனடிப்படையில் போலீசார் சுந்தரராஜன் செங்கல் சூளைக்கு சென்றபோது 3,பேர்கள் இருந்தது தெரியவந்தது.

அவர்களை போலீசார் ஸ்டேஷனுக்கு அழைத்து வந்து விசாரணை செய்தபோது குடிபோதையில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டதாக ஒப்புக்கொண்டனர். அதன்பேரில் போலீசார் வெற்றிவேல்,அசோகன் மற்றும் சிவக்குமார் ஆகிய 3 பேர்கள் மீது வழக்கு பதிவு செய்து அவர்களிடமிருந்து சுமார் ஒரு லட்சம் மதிப்புள்ள காப்பர் வயர்களை மீட்டு சிறையில் அடைத்தனர்.

Views: - 403

0

0