சொகுசு காரில் தொடரும் ஆடு திருட்டு! – கலக்கத்தில் ஆடு வளர்ப்போர்

Author: Udayaraman
10 January 2021, 3:19 pm
Quick Share

ராணிப்பேட்டை: சொகுசு காரினை பயன்படுத்தி 16 ஆடுகளை திருடிய சம்பவத்தில் மூன்று நபர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

ராணிப்பேட்டை மாவட்டம் கலவை அடுத்து கே வெள்ளூர் தென்னான்டை தெருவை சேர்ந்தவர் அம்பிகா. இவர் ஆடுகளை வளர்க்கும் விவசாயி கடந்த 8ஆம் தேதி அதிகாலை நான்கு மணிக்கு தனது வீட்டை விட்டு வெளியே வந்து பார்க்கும் போது வீட்டின் அருகே ஆட்டுதொட்டிலில் அடைக்கப்பட்டிருந்த அவரது 16 ஆடுகள் காணாமல் போயிருப்பதைக் கண்டு அம்பிகா அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அருகே உள்ள கலவை காவல் நிலையத்திற்கு நேரில் சென்று அம்பிகா தனது ஆட்டுதொட்டிலில் இருந்து 16 ஆடுகள் காணாமல் போய்விட்டது என புகார் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது ஆட்டுத் தொட்டி அருகே கீழே கிடந்த வாகன ஓட்டுநர் உரிம அட்டையினை காவல் துறையினர் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையின் போது வாகன ஓட்டுநர் உரிம அட்டையில் இருந்த புகைப்படம் மற்றும் முகவரி கொண்டு விசாரணை மேற்கொண்டதில், அதில் இருந்த நபர் கொண்ட குப்பம் பகுதியை சேர்ந்த நரேஷ் குமார் என்பது தெரியவந்தது. இதனடிப்படையில் நரேஷ் குமாரை பிடித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில், நரேஷ் குமார் மற்றும் அவரது கூட்டாளிகளான நரசிபுரம் பகுதியை சேர்ந்த முருகன், பள்ளேரி கிராமத்தை சேர்ந்த விக்னேஷ் ஆகிய மூன்று நபர்களும் இணைந்து சொகுசு காரின் மூலம் அம்பிகாவின் ஆட்டுதொட்டிலில் வளர்க்கப்பட்ட 16 ஆடுகளை கடத்தியது தெரியவந்தது. இதனடிப்படையில் கலவை காவல்துறையினர் மூன்று நபர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

மேலும் இவர்களிடமிருந்து திருடப்பட்ட 16 ஆடுகளையும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட சொகுசு காரினையும், கலவை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். பின்னர் மூன்று நபர்களையும் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி பின்பு வாலாஜா கிளைச் சிறையில் மூவரையும் அடைத்து கலவை காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டனர். சொகுசு காரின் மூலமாக கிராமப்புறங்களில் உள்ள ஆடுகளை திருடி விற்க முயன்ற மூன்று நபர்கள் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Views: - 45

0

0