அரசு பேருந்து மற்றும் வேன் நேருக்கு நேர் மோதிய விபத்து

27 January 2021, 4:34 pm
Quick Share

ஈரோடு: கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள பொலவக்காளி பாளையத்தில் அரசு பேருந்து மற்றும் வேன் நேருக்கு நேர் மோதியதில் 10க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் இருந்து ஈரோடு நோக்கி அரசு பேருந்து 50க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்று கொண்டு இருந்தது. பேருந்து கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள பொலவக்காளிபாளையம் என்ற இடத்தில் சென்றுகொண்டிருந்த போது எதிரே சுண்ணாம்பு பாரம் ஏற்றி வந்த வேன் திடீரென கட்டுப்பாட்டை இழந்து பேருந்து மீது நேருக்கு நேர் மோதியுள்ளது. மோதிய வேகத்தில் பேருந்தின் அடியில் வேன் சிக்கியது. இதில் வேனில் இருந்த டிரைவர் சபரி உட்பட மூன்று பேர் படுகாயமடைந்தனர். அரசு பேருந்து மீது வேன் மோதிய போது பேருந்தின் பின்னால் வந்த லாரி பேருந்து மீது மோதியது.

பேருந்து ஓட்டுநர் விக்னேஷ்வரன், நடத்துநர் லட்சுமிகாந்தன், வேன் டிரைவர் சபரி பீஹார் மாநிலத்தை சேர்ந்த 3 வாலிபர்கள் மற்றும் அரசு பேருந்துவில் பயணம் மேற்கொண்ட 5 பெண்கள் உட்பட பத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். பேருந்தின் அடியில் இருந்த வேன் இடிபாடுகளுக்கிடையே பீகார் மாநில வாலிபர் மோகன்தாஸ் என்ற லோடு மேன் சிக்கி உயிருக்கு போராடிய போது அவரை மீட்க பல்வேறு போராட்டங்களுக்கு பின் முடியாத நிலையில் மீட்பு வாகனம் வரவழைக்கப்பட்டு சுமார் 2 மணி நேரம் போராடி மோகன்தாஸை மீட்டு சிகிச்சைக்காக கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்து குறித்து கோபிசெட்டிபாளையம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் வேனை ஓட்டி வந்த சபரி பள்ளிப்படிப்பை முடித்த பின் வேன் ஓட்டி பழகி வந்துள்ளார் என்பதும் வேனை ஓட்டி பழகிய சில நாட்களில் தனியாகவே லோடு ஏற்றிக்கொண்டு சரக்கு வாகனத்தை இயக்கிய போது விபத்து ஏற்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது. இந்த கோர விபத்தினால் அப்பகுதியில் சுமார் இரண்டு மணிநேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

விபத்தில் சிக்கி உயிருக்கு போராடிவரை மீட்கும் பணியில் அப்பகுதி பொதுமக்களும் காவல்துறையினர் வட்டாரப்போக்குவரத்து அலுவலர்கள் மற்றும் போக்குவரத்து காவல்துறையினர் உட்பட பலர் ஈடுபட்டனர். விபத்தில் சிக்கிய வாகனங்களை மீட்வு வாகனம் மூலம் மீட்ட பிறகு போக்குவரத்து சீர் செய்யப்பட்டது.

Views: - 0

0

0