இழப்பீடு வழங்காத அரசு விரைவுப்பேருந்து ஜப்தி

3 November 2020, 10:37 pm
Quick Share

அரியலூர்: இழப்பீடு வழங்காத அரசு விரைவுப்பேருந்தை அரியலூர் மாவட்ட நீதிமன்ற ஊழியர்கள் மற்றும் போலீசார் ஜப்தி செய்து, நீதி மன்றத்திற்கு எடுத்து சென்றனர்.

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே வெத்தியார்வெட்டு கிராமத்தைச் சேர்ந்த பாரதிராஜா என்பவர் கடந்த 2015- ஆம் ஆண்டு தனது இருசக்கர வாகனத்தில் சென்னை – கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் சொக்கலிங்கபுரம் அருகே சென்றுகொண்டிருந்தபோது பின்னால் வந்த தமிழ்நாடு அரசு விரைவு பேருந்து மோதியதில் பாரதிராஜா தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தவரை ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து பாரதிராஜா தந்தை ராஜேந்திரன் கொடுத்த புகாரின் பேரில் மீன்சுருட்டி போலீசார் வழக்கு பதிந்தனர்.

இதையடுத்து பாரதிராஜாவின் தந்தை ராஜேந்திரன் ரூ.15 லட்சம் நஷ்டஈடு கோரி கடந்த 2015 ம் ஆண்டு அரியலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி விபத்தில் இறந்து போன பாரதிராஜாவின் குடும்பத்தினருக்கு நஷ்ட ஈடாக ரூ.14 லட்சத்து 72 ஆயிரத்தி 722 தொகையை சென்னை அரசு விரைவு போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனர் வழங்கவேண்டும் என கடந்த 2018-ம் ஆண்டு மேற்படி தொகையினை சென்னை அரசுப் போக்குவரத்துக் கழக மேலாண்மை இயக்குனர் வழங்க வேண்டும் எனவும், இல்லையென்றால் அரசு பஸ்சை ஜப்தி செய்யவும் நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

இதையடுத்து ஜெயங்கொண்டம் நான்கு ரோடு பகுதியில், கும்பகோணத்தில் இருந்து சென்னையை நோக்கி 15 பயணிகளுடன் சென்று கொண்டிருந்த அரசு விரைவு பேருந்தை நீதிமன்ற ஊழியர்கள் மற்றும் போலீசார் நிறுத்தி பயணிகளை பேருந்திலிருந்து இறக்கி அவ்வழியே சென்ற மற்றொரு பேருந்தில் ஏற்றி அனுப்பி வைத்தனர். பின்னர் பேருந்தை ஜப்தி செய்து, நீதி மன்றத்திற்கு எடுத்து சென்றனர்.

Views: - 16

0

0