குடிநீர் வசதி இல்லாமல் இயங்கும் அரசு தலைமை மருத்துவமனை: அவதிக்குள்ளாகும் பொதுமக்கள் மற்றும் நோயாளிகள்

Author: Udhayakumar Raman
27 October 2021, 8:04 pm
Quick Share

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் குடிநீரின்றி நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு நாளொன்றுக்கு சுமார் உள் மற்றும் புற நோயாளிகள் என சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வந்து செல்லும் இடமாக விளங்குகின்றது. காஞ்சிபுரம் சுற்றி உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்தவர்கள் சிகிச்சைக்காக இந்த மருத்துவமனையை நாடி வருகின்றனர். இப்படிப்பட்ட சூழ்நிலையில் சில மாதமாக மருத்துவமனையில் குடிக்க குடிநீர் இன்றி நோயாளிகளும் பொதுமக்களும் பெரும் அவதிப்பட்டு வருகிறார்கள். மருத்துவமனையின் புற நோயாளிகள் பிரிவின் அருகே உள்ள சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் சில மாதமாக பழுதடைந்து உள் மற்றும் புற நோயாளிகள் குடிக்கத் தண்ணீர் இன்றி அவதிப்பட்டு வருகின்றனர்.

அதேபோல் காய்ச்சல் , வாந்தி , பேதி, குடல் ஆபரேஷன் செய்தவர்கள் , அடிபட்டவர்கள் மற்றும் நீரிழிவு நோயாளிகள் தங்கி சிகிச்சை பெறும் வார்டு அருகே பல லட்ச ரூபாய் மதிப்பீட்டில் தனியார் நிறுவனத்தால் கட்டப்பட்ட குளிரூட்டும், சுத்திகரிக்கப்பட்ட டேங்க் கடந்த சில மாதங்களாக தண்ணீர் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது. இங்குள்ள ஆண்டுகளில் மட்டும் சுமார் 200 க்கும் மேற்பட்டவர்கள் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களுக்கு மருந்து மாத்திரை எவ்வளவு முக்கியமோ அந்த அளவுக்கு குடித்தண்ணீரும் மிக முக்கியம். இந்த வார்டு அருகே மருத்துவர்கள் தங்கும் குடியிருப்பு உள்ளது அப்படி இருந்தும் எந்த ஒரு மருத்துவரும் இந்த பகுதியில் குடிதண்ணீர் இல்லாமல் நோயாளிகள் கடும் அவதிப்படுவதை கண்டுகொள்ளவில்லை என பெரும்குற்றச்சாட்டு இருக்கின்றது.

அதேபோல் ஆண் நோயாளிகள் பெருமளவில் தங்கி சிகிச்சை பெற்று வருகின்ற ஆண்கள் பிரிவு அருகே திமுக சட்டமன்ற உறுப்பினர் சிவிஎம்பி. எழிலரசன் சட்டமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து கட்டபட்ட நவீன குளிரூட்டும் , சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் கட்டிய நாளிலிருந்து இந்த விநாடி வரை ஒரு சொட்டு குடிநீரும் கிடைக்கவில்லை. நோயாளிகள் பொதுமக்கள் என பலர் சட்டமன்ற உறுப்பினரிடம் புகார் தெரிவித்தும் அவர் கண்டுகொள்ளவில்லை என கூறப்படுகிறது.இந்தப் பகுதியில் கொரோனா நோயாளிகளும் ,காச நோயாளிகளும், கண் அறுவை சிகிச்சை செய்துகொண்ட நோயாளிகளும் அதிகமாக தங்கி சிகிச்சை பெற்று வருகின்ற நிலையில் குடிதண்ணீர் இல்லாமல் நோயாளிகளும் அவதிப்பட்டு வருகின்றனர்.

குறிப்பாக இந்தப் பகுதியில் யாருடைய துணையும் இல்லாமல் ஆதரவற்ற நிலையில் உள்ள பல நோயாளிகள் குடி தண்ணீர் இல்லாமல் மிகவும் சிரமப்பட்டு வெளியிலிருந்து வருகின்ற நபர்களிடம் கெஞ்சி கூத்தாடி போர்வெல் வாட்டர் குடித்து தங்கள் உடல் நலத்தை மேலும் கெடுத்துக் கொள்கின்றனர். இதுமட்டுமல்லாமல் மருத்துவமனையில் நீண்ட நாட்கள் தங்கி சிகிச்சை பெற்று வரும் பல நோயாளிகள் குளிப்பதற்கும், கழிவறை சென்று கால் கழுவுவதற்கும் தண்ணீரின்றி மிகவும் துன்பப்படுகின்றனர். குறிப்பாக பெண் நோயாளிகளின் பாடு மிகவும் கஷ்டமாக உள்ளது. காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனை மேம்படுத்தப்பட்டு புதிய ஆட்சி வந்தவுடன்தான் இந்த அவலம் ஏற்படுவதாக சமூக ஆர்வலர்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

மேலும் இந்த பகுதியில் உள்ள கடைகளில் குடிதண்ணீர் பாட்டில் அமோக விற்பனை செய்வதற்காகவே மருத்துவமனை நிர்வாகம் நோயாளிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தரவில்லை என்ற குற்றசாட்டும் எழுகிறது. இதைப் பற்றி , ஓட்டலில் வேலை செய்யும் ஓரிக்கை பகுதியை சேர்ந்த வயதான முதியவர் ஜோதி என்பவர் கூறும்போது, தன்னுடைய மனைவியை நீரிழிவு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்து ஒரு மாத காலமாக சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இன்றி அல்லல்பட்டு சில நேரங்களில் கழிவறை தண்ணீரை குடித்து தன்னுடைய உடல் நலத்தையும் கெடுத்து கொண்டதாக வேதனையுடன் தெரிவிக்கின்றார். மேலும் மருந்து மாத்திரைகள் மற்றும் உணவு இல்லாவிட்டாலும் பரவாயில்லை குடிக்க குடித்தண்ணீீீராவது கொடுங்கள் என பரிதாபமாக வேண்டுகிறார்.

மிக முக்கியத்துவம் வாய்ந்த அரசு தலைமை மருத்துவமனையில், நிர்வாக கோளாறு காரணமாகவும், ஆளுங்கட்சியின் தலையீடு காரணமாகவும் நோயாளிகளுக்கு கிடைக்கக்கூடிய அடிப்படை வசதிகள் கிடைக்கவில்லை என்ற பொதுவான குற்றசாட்டு எழுந்துள்ளது. போர்க்கால அடிப்படையில் மாவட்ட நிர்வாகம் கவனம் செலுத்தி அரசு தலைமை மருத்துவமனையில் குடிதண்ணீர் வசதியை ஏற்படுத்தி தர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

Views: - 67

0

0