இடிந்து விழுந்து வரும் அரசு நடுநிலைப்பள்ளி: மாணவர்களை பள்ளிக்கு அனுப்புவதில் பெற்றோர்கள் கலக்கம்

24 September 2020, 3:19 pm
Quick Share

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வீராட்சி மங்கலத்தில் உள்ளது ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளி .வீராட்சி மங்கலம், மதுக்கம் பாளையம், காட்டூர், சீராம் பாளையம், உள்ளிட்ட கிராமங்களிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் இப்பள்ளியில் படித்து வருகின்றனர். 10 ஆசிரியர்கள், 1 தலைமை ஆசிரியருடன் செயல்பட்டு வரும் இப்பள்ளி கட்டிடங்கள் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது.

இந்நிலையில் கட்டிடமேம்பாட்டுப்பணி முடிந்த மூன்றே ஆண்டில் கடந்த 2019 ஆம் ஆண்டு 7ஆம் வகுப்பு மாணவர்கள் படிக்கும் வகுப்பறையின் கான்கிரீட் மேல்கூரை வகுப்பறையின் இருபுறமும் அடிக்கடி பெயர்ந்து விழுந்ததால் வகுப்பறையின் மையப்பகுதியில் மாணவர்களை அமரவைத்து எப்போது இடிந்து விழுமோ என ஆசிரியரும் மாணவரும் அமர்ந்திருந்தனர். தற்போது கொரொனா நோய்தொற்று காரணமாக கடந்த 6 மாதத்திற்கு மேலாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள காலகட்டத்தில் இப்பள்ளியின் முன் பகுதியிலும் வகுப்பறை பகுதியிலும் உள்ள சிமெண்ட் மேற்கூரைகள் இடிந்து விழுந்து.

அதன் பாகங்கள் மீண்டும் எப்போது வேண்டுமானாலும் விழும் நிலையில் உள்ளது. பள்ளிக்கு விடுமுறை விட்டாலும் மாலை நேரத்தில் பள்ளி விளையாட்டு மைதானத்தில் கூடும் மாணவர்கள் இடிந்து வரும் இப்பள்ளி கட்டிடத்தின் அருகிலேயே விளையாடுவதும், பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்ட பின் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பலாமா வேண்டாமா என பெற்றோர்களும் கலக்கமடைந்துள்ளனர். தமிழக அரசு பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்த்து படிக்க வைக்க வேண்டும் என அறிவிப்புச் செய்து வரும் நிலையில் இந்த அரசு பள்ளியின் நிலை மாணவர்களுக்கு அச்சத்தையும் பெற்றோர்களுக்கு பீதியையும் ஏற்படுத்தி வருகிறது.

எனவே பள்ளியை மீண்டும் திறப்பதாக தமிழக அரசு அறிவிப்பதற்கு முன்பே இடிந்து விழுந்து வரும் இப்பள்ளி கட்டிடத்தை இடித்து புதிய கட்டிடத்தை கட்டித்தர வேண்டும் இல்லையென்றால் தங்கள் குழந்தைகளை இப் பள்ளிக்கு அனுப்புவது இல்லை என பெற்றோர்கள் தங்களது இயல்பான அச்சத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இப்பள்ளி கட்டிடத்தின்ஆபத்தான நிலை குறித்து அரசுக்கும் மாவட்ட நிர்வாகத்திற்கும் ஊராட்சிஒன்றிய அதிகாரிகளுக்கும் ஒரு வருடத்திற்கு முன்பே தகவல் தெரிவித்துள்ளதாக பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் தகவல் கூறினர். இன்றைய காங்கிரஸ் கட்சியின் தாராபுரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் காளிமுத்துவின் சொந்த கிராமமான வீராட்சி மங்கலத்தில் இதே பள்ளியில் அவரும் படித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.