வேலைவாய்ப்பு இன்றி தொழில் முடங்கிய கைத்தறி மற்றும் விசைத்தறி: நெசவாளர்கள் வேதனை

14 January 2021, 7:35 pm
Quick Share

திருவள்ளூர்: பொன்னேரி ஆரணியில் கைத்தறி மற்றும் விசைத்தறி தொழில் செய்யும் நெசவாளர்கள் உரிய வேலைவாய்ப்பு இன்றி தொழில் முடங்கியதால் வேதனை அடைந்து வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட ஆரணி மற்றும் கும்மிடிப்பூண்டி அருகே உள்ள மாதர்பாக்கம், திருத்தணி, பள்ளிப்பட்டு, அம்மையார்குப்பம், ஸ்ரீகாளிகாபுரம், பொதட்டூர்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில்  விஸசாயத்திற்கு அடுத்தபடியாக நெசவுத்தொழில் அப்பகுதி மக்களின் பிரதான தொழிலாக விளங்கி வருகிறது. இதில் ஆரணி கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவாளர்கள் சுமார் 1,200 குடும்பங்கள் இத்தொழிலை நம்பி வசித்து வருகின்றனர்.

இங்கு நெய்யப்படும் லுங்கிகள் சேலைகள் மும்பை, சென்னை, பெங்களூர் உள்ளிட்ட பகுதிகளில் விற்பனைக்கு கொண்டு செல்லப்படுவது வழக்கம். இந்த ஆண்டு கொரோனா பெருந்தொற்றில் தொடங்கி 10 மாதங்களாக தொழில் முடங்கி உரிய பாகு, நூல்கள் கிடைக்காததால் நெசவுத் தொழில் நலிவடைந்து உள்ளது. போதிய வருமானம் இன்றி இத்தொழிலை நம்பி உள்ள 1200 குடும்பங்களைச் சேர்ந்த நெசவாளர்களும் நெசவு தொழிலை உப தொழிலாக கொண்ட அதனைச் சார்ந்து தொழில் புரிபவர்களும் போதிய வருமானம் இன்றி கடும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர்.

கொரோனா தொற்றினை தொடர்ந்து  நிவர் மற்றும் புரெவி புயலால் நெசவு தொழில் முற்றிலும் முடங்கியுள்ளது. இதனால் இந்த ஆண்டு தை த்திருநாளில் புடவைகள் லுங்கிகள் உள்ளிட்ட துணி வகைகளை தயாரித்து விற்பனைக்கு அனுப்பும், இந்த நெசவாளர்களின் குடும்பத்தினருக்கு போதிய வருமானம் இல்லாததால் போதிய வருமானம் இன்றி உள்ளனர்.

அரசு இவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் கட்டுமான தொழிலாளர்களுக்கு தமிழக அரசு உதவி வருவது போன்று நெசவு தொழிலாளர்களுக்கும், வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் விதமாக வீட்டுமனை குடியிருக்க வேண்டிய வசதிகள் உள்ளிட்ட தேவைகளை தமிழக அரசு செய்து தர வேண்டும் என்றும் நெசவாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Views: - 10

0

0