வீட்டில் பதுக்கி வைத்திருந்த பட்டாசுகள் வெடித்ததில் கணவன், மனைவி உயிரிழப்பு

28 September 2020, 10:37 pm
Quick Share

புதுச்சேரி: புதுச்சேரியில் உரிய அனுமதியின்றி வீட்டில் பதுக்கி வைத்திருந்த பட்டாசுகள் வெடித்ததில் கணவன், மனைவி உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுச்சேரி அரியாங்குப்பம், அந்தோனியர் கோவில் வீதியை சேர்ந்தவர் நெப்போலியன், அரசின் உரிய அனுமதி இல்லாமல் வீட்டு அருகே பட்டாசு தயாரிக்கும் தொழில் செய்து வருகிறார். இவர் பட்டாசு தயாரிப்பதற்கான மூலப்பொருட்களை அருகில் இருந்த ஒரு கட்டட வீட்டில் வைத்து பட்டாசு தயாரிப்பில் ஈடுப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் நெப்போலியன் வேலை செய்யும் கட்டிடத்தில் இருந்து பயங்கர வெடி சத்தம் கேட்டுள்ளது. அப்போது அருகில் இருந்தவர்கள் சென்று பார்த்தபோது நெப்போலியன் பட்டாசு மூலப்பொருள் தேக்கி வைத்திருந்த வீடு வெடித்து தரைமட்டமானது. மேலும் நெப்போலியன் அவரது குடும்பத்துடன் வசித்த குடிசை வீடும் விபத்தில் சரிந்து தரைமட்டமானது. இதில் நெப்போலியன் மற்றும் அவரது மனைவி பத்மா இடிபாடுகளில் சிக்கி கொண்டனர்.

தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை அணைத்து இடிபாடுகளில் சிக்கியிருந்த நெப்போலியன் மற்றும் அவரது மனைவி பத்மாவை உயிருக்கு ஆபத்தான நிலையில், புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் தம்பதியினர் மருத்துவமனை செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த வெடி விபத்து சம்பவம் குறித்து அரியாங்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் நெப்போலியனின் மகள்கள் இருவரும் வெளியே சென்றிருந்ததால் அவர்கள் இந்த வெடி விபத்தில் இருந்து தப்பித்தது குறிப்பிட்டதக்கது.

Views: - 8

0

0