முழுஊரடங்கிலும் சளைக்காத சட்டவிரோத மதுவிற்பனை : ரூ. 5 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்கள் பறிமுதல்

16 May 2021, 10:35 am
viruthunager liquor - updatenews360
Quick Share

விருதுநகர் : விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் முறைகேடாக மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதற்காக வைத்திருந்த 5,256 மது பாட்டில்களை மதுவிலக்கு போலீசார் பறிமுதல் செய்தனர்.

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வரும் நிலையில், நோய் தொற்றுகளை கட்டுப்படுத்த தமிழக அரசு ஊரடங்கு பிறப்பித்துள்ளது. கடந்த 10ஆம் தேதி முதல் ஊரடங்கு கடுமையாக்கப்பட்டது. இதனால் அரசு மதுபான கடைகள் அனைத்தும் மூடப்பட்டன.

இந்நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கிருஷ்ணாபுரம் கிராமத்தில் உள்ள அரசு டாஸ்மாக் மதுபானக் கடையில் மேற்பார்வையாளராக பணி புரிந்து வரும் சிவசுப்பிரமணியன், தான் வேலைபார்க்கும் கடையிலிருந்து மது பாட்டில்களை பதுக்கி வைத்து மகாராஜபுரத்தில் உள்ள தோப்பில் வைத்து முறைகேடாக விற்பனை செய்து வருவதாக மதுவிலக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதனையடுத்து, மதுவிலக்கு டிஎஸ்பி இமானுவேல் ராஜ்குமார் தலைமையிலான போலீசார் அப்பகுதியில் சோதனையிட்டனர். அப்போது, அங்கு தென்னந்தோப்பில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 4,992 குவார்ட்டர் பாட்டில்களும் 264 ஆஃப் பாட்டில்களும் மொத்தம் ஆயிரத்து 5,256 பாட்டில்களை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து மது பாட்டில்களை பதுக்கி வைத்திருந்த கிருஷ்ணாபுரம் டாஸ்மாக் மதுபான கடையின் மேற்பார்வையாளர் சிவசுப்பிரமணியன் தலைமறைவானதையடுத்து மதுவிலக்கு போலீசார் அவரை தேடி வருகின்றனர்.

Views: - 127

0

0