பாலமுருகன் கோயிலில் திருக்கல்யாண நிகழ்ச்சி
21 November 2020, 2:51 pmஈரோடு: கோபிசெட்டிபாளையம் பச்சமலையில் உள்ள பிரசித்தி பெற்ற பாலமுருகன் கோயிலில் நேற்று நடைபெற்ற சூரசம்ஹார விழாவையொட்டி இன்று நடைபெற்ற திருக்கல்யாண நிகழ்வில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் பச்சமலையில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்றது பாலமுருகன் திருக்கோயில். இக்கோயிலில் பங்குனி உத்திரம் தைபூசம் மற்றும் கந்த சஷ்டி சூரசம்ஹார விழாகள் வெகு சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்தாண்டு கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக அரசு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் நேற்று நடைபெற்ற சூரசம்ஹார விழாவில் குறைந்தளவு பக்தர்களே கலந்துகொண்டனர். ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு வந்து அனுமதியில்லாததினால் ஏமாற்றமடைந்து திரும்பிச்சென்றனர். இந்நிலையில் சூரசம்ஹார விழாவின் அடுத்த நாளான இன்று நடைபெற்ற முருகன் தெய்வானை திருக்கல்யாண நிகழ்வில் ஆயிரக்கணகான பக்தர்கள் குவிந்தனர். இந்நிகழ்வு காலை 7 மணிக்கு பூஜையுடன் தொடங்கியது.
அதனை தொடர்ந்து சிறப்பு பூஜைகள் மற்றும் திருவீதி உலா போன்றவை நடைபெற்ற பின்னர் முருகன் தெய்வானைக்கு ஆச்சாரியர்கள் திருக்கல்யாணத்தை நடத்தி வைத்தனர். அப்போது கோயில் வளாகத்தில் கூடியிருந்த பக்தர்கள் அரோகரா அரோகரா கோஷங்கள் எழுப்பி திருக்கல்யாணத்தை கண்டு மகிழ்ந்தனர். அதனை தொடர்ந்து நடைபெற்ற சிறப்பு பூஜை மற்றும் ஆராதனைகளில் பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர். சூரசம்ஹார நிகழ்வை காணமுடியாத பக்தர்கள் திருக்கல்யாண நிகழ்வை கண்டு மகிழ்ந்துள்ளனர். அதனை தொடர்ந்து கந்த சஷ்டி விரதம் மேற்கொண்டு வந்த பக்தர்களுக்கு வாழைத்தண்டு பிரசாதம் வழங்கி விரதத்தை முடித்துவைத்தனர்.
0
0