உலகப் புகழ் பெற்ற வேளாங்கண்ணி மாதா கோவில் திறப்பு: உள்ளூர் பக்தர்கள் பிரார்த்தனை

2 September 2020, 5:38 pm
Quick Share

நாகப்பட்டினம்: உலகப் புகழ் பெற்ற வேளாங்கண்ணி மாதா கோவில் சிறப்பு திருப்பலியில் பக்தர்கள் ஏராளமனோர் கலந்து கொண்டு மாதாவை தரிசனம் செய்து பிரார்த்தனை நடத்தினர்.

தமிழகத்தில் நேற்று அனைத்து வழிபாட்டு தலங்களும் திறக்கப்பட்டு இருந்த நிலையில், நாகப்பட்டினம் மாவட்டம் உலக புகழ் பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயம் திறக்காதது பக்தர்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் தமிழக அரசின் உத்தரவை தொடர்ந்து இன்று முதல் தரிசனத்திற்காக வேளாங்கண்ணி பேராலயம் திறக்கப்படும் என நாகை மாவட்ட ஆட்சியர் பிரவீன் நாயர் தெரிவித்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து இன்று வேளாங்கண்ணி பேராலயம் திறக்கப்பட்டது. பின்னர் வேளாங்கண்ணி பேராலயத்திற்கு வருகை தந்த பக்தர்களுக்கு பேராலய அதிபர் பிரபாகர், பங்குத்தந்தை சூசைமாணிக்கம் முன்னிலையில் தெர்மாமீட்டர் வெப்ப பரிசோதனை மற்றும் கிருமி நாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்த பின்னரே முககவசம் அணிந்து , சமூக இடைவெளியை பின்பற்றி ஆலயத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர்.

அதனைத் தொடர்ந்து ஆலயத்திற்கு சென்ற பக்தர்கள் பிரார்த்தனை மற்றும் சிறப்பு திருப்பலியில் பங்கேற்று மாதாவை வேண்டிக்கொண்டனர். வேளாங்கண்ணி மாதா பேராலயத்தில் உள்ளூர் பக்தர்கள் இன்று காலை 8 மணி முதல் மாலை 5:30, மணி வரை முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியுடன் பிரார்த்தனைக்கு செல்ல அனுமதி வழங்கியுள்ள மாவட்ட நிர்வாகம் செப்டம்பர் 8ம் தேதி வரை வெளி மாநில மற்றும் வெளி மாவட்ட பக்தர்கள் வேளாங்கண்ணி கோவிலுக்கு வருவதற்கு தடை விதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 6

0

0