கொரோனா தடுப்பூசியில் இந்தியா உலக நாடுகளுக்கு முன்னோடி: மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் பேச்சு

22 January 2021, 4:38 pm
Quick Share

வேலூர்: கொரோனா தடுப்பூசியில் இந்தியா உலக நாடுகளுக்கு முன்னோடியாக உள்ளதாகவும், மக்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுகொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வேலூர் மாவட்டம்,பாகாயம் அருகேயுள்ள மேட்டு இடையம்பட்டி கிராமத்தில் இந்திய அரசின் தகவல் ஒளிபரப்பு அமைச்சகம் மற்றும் மக்கள் தொடர்பு கள அலுவலகம் சார்பில் தூய்மை இந்தியா மற்றும் வாக்காளர் விழிப்புணர்வு கொரோனா தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தலைமை இயக்குநர் பத்திரிகை தகவல் அலுவலகம் வெங்கடேசவர் மற்றும் கூடுதல் துணை இயக்குநர் அண்ணாதுரை, மாவட்ட திட்ட அலுவலர் கோமதி உள்ளிட்ட அரசு அதிகாரிகளும் திரளான கிராம மக்களும் கலந்துகொண்டனர்.

இதில் கொரோனா தடுப்பூசியின் அவசியம் மற்றும் பயன் குறித்தும், சுகாதாரம் தூய்மை குறித்தும், நாட்டுபுறக்கலைகள் மூலம் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டதுடன் மருத்துவ முகாமும் நடைபெற்றது. பின்னர் மக்களுக்கு முகக்கவசம், கிருமி நாசினி உள்ளிட்டவைகளையும் ஆட்சியர் வழங்கியதுடன், சுற்றுசூழல் பாதுகாக்க மரம் நடுவதை வலியுறுத்தி மரக்கன்றுகளும் நடப்பட்டது. இக்கூட்டத்தில் வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் பேசுகையில்,

“கொரோனா தடுப்பூசி தயாரிப்பிலும், அதனை அதிக அளவில் போட்டுகொள்வதிலும் மற்ற நாடுகளுக்கெல்லாம் முன்னோடியாக இந்தியா திகழ்கிறது. மேலும் மக்களாகி நீங்கள் ஏரிகள், குளங்கள் நீர் நிலைகளை பாதுகாக்க வேண்டும், மழைநீரை சேமிக்க வேண்டும், அதனை ஆழ்துளைகிணற்றில் கொண்டு சேர்க்க வேண்டும், ஏரிகள், குளங்களை நீங்கள் தான் பாதுகாக்க வேண்டும், அப்போது தான் குடிநீர் பஞ்சம் ஏற்படாது. அதனை விடுத்து குடிநீருக்காக அரசை எதிர்பார்க்க கூடாது என்றும், வேலூர் மாவட்ட மக்கள் தொகையில் 71 சதவிகிதம் பேர் தங்களை வாக்காளர்களாக பதிவு செய்துள்ளதாகவும் பேசினார்.

Views: - 22

0

0