இந்திராகாந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கூடுதலாக 400 படுக்கைகள்: மல்லாடி கிருஷ்ணா ராவ் தகவல்…

25 August 2020, 6:48 pm
Quick Share

புதுச்சேரி: புதுச்சேரி இந்திராகாந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கூடுதலாக 400 படுக்கைகள் அமைக்க சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணா ராவ் உத்தரவிட்டுள்ளார்.

புதுச்சேரியில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் இந்திராகாந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ஜிப்மர் மருத்துவமனையில் உள்ள படுக்கைகள் முழுமையாகி விட்டது. மேலும் தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் தற்போது தனியார் மருத்துவக் கல்லூரியிலும் , வீட்டிலும் தனிமைப்படுப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் இந்திராகாந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கூடுதலாக படுக்கைகள் அமைப்பது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணா ராவ் இன்று ஆய்வு மேற்கொண்டார்.

அரசு மருத்துவக் கல்லூரியில் உள்ள மாணவர் விடுதியை ஆய்வு செய்த அவர், அங்கு 300படுக்கைகள் அமைக்கவும், இதேபோல் மருத்துவமனையில் உள்ள பிரிவில் கூடுதலாக 100 படுக்கைகள் என மொத்தமாக 400 படுக்கைகள் அமைக்கவும் உத்தரவிட்டார். மேலும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வந்தவர்களுக்கு விரைவாக பரிசோதனை நடத்தி அவர்களை காக்க வைக்காமல் உடனடியாக நடவடிக்கை எடுக்கவும், மருத்துவக் கல்லூரி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.