உலகின் அதிக சுவையுள்ள சால்மன் மீன்: துபாயில் செயற்கை பண்ணையில் ஆண்டுக்கு 1,000 டன் மீன் உற்பத்தி..!!

23 January 2021, 3:32 pm
artificial fish tank - updatenews360
Quick Share

துபாய்: ஸ்காட்லாந்து ஏரிகளை போன்று செயற்கையாக அமைக்கப்பட்ட துபாய் ஜெபல் அலி பண்ணையில் ஆண்டுக்கு 1,000 டன் மீன் உற்பத்தி செய்யப்படுவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகின் அதிக சுவையான மீன்களில் சால்மன் மீன் முதன்மையான இடத்தை பிடித்துள்ளது. அமீரகத்தை பொறுத்தவரையில் 92 சதவீத சால்மன் மீன்கள் வெளிநாடுகளில் இருந்தே இறக்குமதி செய்யப்படுகிறது. சால்மன் மீன் என்பது குளிர் பிரதேசங்களிலும், குறிப்பாக துருவ பகுதியிலும் அதிகமாக காணப்படும்.

சால்மன் மீன்கள் அதிகமாக ஐஸ்லாந்து, நார்வே, ஸ்வீடன், ஸ்காட்லாந்து, அலாஸ்கா உள்ளிட்ட பகுதிகளில் வாழ்ந்து வருகின்றன. இவைகள் அட்லாண்டிக் சால்மன் என்ற பெயரில் அழைக்கப்படுகின்றன. துபாயில் இந்த மீன்களை வளர்ப்பது மிக சவாலான ஒன்றாகும். அதற்கு காரணம் இங்கு நிலவும் அதிக வெப்பநிலை. அதிகமான சூட்டில் இந்த மீன்கள் உயிர் வாழ்வதில்லை.

இந்த மீன்களை துபாயில் தகுந்த கட்டமைப்புகளுடன் உற்பத்தி செய்ய ஜப்பான் நாட்டில் உள்ள அம்பர்ஜாக் நிறுவனத்தின் ஒத்துழைப்பில் பட்டத்து இளவரசர் மேதகு ஷேக் ஹம்தான் பின் முகம்மது பின் ராஷித் அல் மக்தூமால் மீன் பண்ணை உருவாக்கப்பட்டது. இந்த மீன் பண்ணையில் தற்போது 5 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில் பிரமாண்ட தொட்டிகள் அமைக்கப்பட்டு அதில் கடல் நீர் நிரப்பப்பட்டுள்ளது.

மேலும் அதில் குளிர்விப்பான்கள் மூலம் வெப்பநிலை பராமரிக்கப்பட்டு வருகிறது. இங்குள்ள தொட்டிகள் 14 டிகிரி செல்சியஸ் முதல் அதிகபட்சமாக 27 டிகிரி வெப்பநிலையில் பரமாரிக்கப்பட்டு வருகிறது. இந்த கடல் நீரானது வடிகட்டி சுத்தம் செய்யப்பட்டு பயன்படுத்தப்படுகிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் மீன்கள் இயற்கையாக கடலில் உள்ளதுபோல் ஆரோக்கியமானதாக வளர்கிறது.

அதற்காகவே ஸ்காட்லாந்து நாட்டில் உள்ள ஏரிகளை போன்ற தகவமைப்புகள் செயற்கையாக இந்த தொட்டிகளில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இங்குள்ள மீன்களுக்கு இயற்கையான உணவு பொருட்களை கொடுப்பதன் மூலம், அதன் இறைச்சியும் சுவையாக உள்ளது. தற்போது ஏற்படுத்தப்பட்டுள்ள நவீன வசதிகளினால், ஆண்டுக்கு 1,000 டன் எடையுள்ள மீன்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. இயற்கையாக பனிக்கடலில் வாழும் மீன்களை போன்று வளர்க்கப்படுவது இதன் முக்கிய சிறப்பம்சமாகும்.

Views: - 10

0

0