நீதிபதி போல கையெழுத்திட்டு கொலை வழக்கில் விடுதலை என தீர்ப்பு அறிக்கை:போலி வழக்கறிஞருக்கு 6 வருட சிறை தண்டனை
Author: kavin kumar4 October 2021, 6:28 pm
திண்டுக்கல்: திண்டுக்கல்லில் நீதிபதி போல கையெழுத்திட்டு கொலை வழக்கில் விடுதலை என தீர்ப்பு அறிக்கை கொடுத்து ஏமாற்றிய வழக்கில் போலி வழக்கறிஞருக்கு 6 வருட சிறை தண்டனை மற்றும் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கியது.
திண்டுக்கல் ஆர் எம் காலனி பகுதியை சேர்ந்தவர் ஊமையன். இவரது மகன் சிவநாத் இவர் கடந்த 2005 ஆம் ஆண்டு திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் நடந்த ஒரு கொலை வழக்கு தொடர்பாக நான்காவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். இந்த வழக்கு விசாரணை தற்போது வரை திண்டுக்கல் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இதனிடையே இந்த வழக்கில் சிவநாத்தை விடுவித்து தருவதாக கூறி ஊமையனிடம் திண்டுக்கல் முருக பவனம் பகுதியைச் சேர்ந்த கார்த்திக் என்ற இளைஞர் தன்னை ஒரு வழக்கறிஞர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு வழக்கு விசாரணை வரும் போதெல்லாம் பல்வேறு கட்டமாக சுமார் நாற்பத்தி மூன்று லட்சம் வரை பணம் வாங்கி உள்ளார். வழக்கு விசாரணைக்கு ஆஜராகி வழக்கிலிருந்து விடுவிக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்து உள்ளதாக கூறி உள்ளார். ஒருகட்டத்தில் வழக்கு விசாரணை முடிந்து விட்டதாக கூறிய கார்த்திக், ஊமையானிடம் சிவநாதன் வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்டதாக கூறி அதற்கு விடுதலை அறிக்கை ஒன்றையும் மாவட்ட நீதிபதி கையெழுத்துடன் வழங்கியுள்ளார்.
இதில் உமையானுக்கு சந்தேகம் எழுந்துள்ளது, இதையடுத்து நீதிமன்றத்தை உமையான் நாடியுள்ளார் ,அங்கு கார்த்திக் ஒரு போலியான வழக்கறிஞர் என்றும் நீதிபதி கையெழுத்தை போலியாக போட்டு விடுதலை அறிக்கை கொடுத்து இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து நீதிமன்ற பரிந்துரையின்படி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி கார்த்திக்கை கடந்த 13.04.2021 அன்று கைது செய்தனர். இந்த வழக்கு திண்டுக்கல் ஜுடிசியல் மாஜிஸ்திரேட் கோர்ட் எண் 2 இல் நடைபெற்றது, இந்த நிலையில் வழக்கின் தீர்ப்பு இன்று அளிக்கப்பட்டது, அதில் நீதிபதியின் போலியான கையெழுத்துப் போட்டு மோசடியில் ஈடுபட்ட போலி வழக்கறிஞர் கார்த்திக்கிற்கு 6 ஆண்டு சிறை தண்டனையும் 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து குற்றவியல் நீதித்துறை நடுவர் எண் 2 மாஜிஸ்திரேட்டு கார்த்தி தீர்ப்புக் கூறினர், இதையடுத்து போலி வழக்கறிஞர் கார்த்திக் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
0
0