காவிரி ஆற்றின் குறுக்கே புகழூரில் கதவணை அடுத்த வாரம் திறப்பு: அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேட்டி

By: Udayaraman
11 October 2020, 8:56 pm
Quick Share

கரூர்: காவிரி ஆற்றின் குறுக்கே புகழூரில் கதவணை கட்ட திட்ட மதிப்பு தயாரிக்கப்பட்டு 403 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட உள்ள கதவணையை முதல்வர் அடுத்த வாரம் துவக்கி வைக்க உள்ளதாக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

கரூரை அடுத்த மண்மங்களத்தில் தனியார் திருமண மண்டபத்தில் நொய்யல் பாசன வாய்க்கால் சாயக்கழிவு நீரால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீட்டு தொகை பெற்றுத் தருவதற்கான விவசாயிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இந்த கூட்டத்தில் நொய்யல் ஆற்றுப் பாசன வாய்க்கால் விவசாயிகள் சங்க பொறுப்பாளர்கள், கரூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். அப்போது பேசிய போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்,

நொய்யல் பாசன விவசாயிகளுக்காக எம்.ஜி.ஆர் கொண்டு வந்த திட்டம். ஆத்துப்பாளையம் நீர் தேக்கம் முதல் 55 கி.மீ தூரம் பாசன வாய்க்கால் வெட்டி இந்த பகுதியில் 19500 ஏக்கர் பாசன வசதி பெற்றது. திருப்பூர் சாயப்பட்டறை கழிவு நீர் நொய்யல் ஆற்றில் வந்ததால் நொய்யல் ஆறும், பாசன வாய்க்கால், பாசன நிலபரப்புகள் பால்பட்டு போனது. இதனால் விவசாயிகள் நீதிமன்றம் சென்று நொய்யல் ஆற்றில் சாயப்பட்டறை கழிவு நீர் திறந்து விட தடையாணை பெற்றதால் கடந்த 18 ஆண்டுகள் தண்ணீர் வரவில்லை. உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் வழக்கு தொடந்தவரை தொடர்பு கொண்டு அதை வாபஸ் பெற வைத்து கடந்த ஆண்டு தண்ணீர் திறக்கப்பட்டது.

இந்த ஆண்டு இரண்டரை கோடி ரூபாய்க்கு தூர் வாரப்பட்டு 2 வது முறையாக நீர் தேக்கத்தில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. நொய்யல் ஆற்றில் 6000 டி.டி.எஸ் அளவில் கழிவு தண்ணீர் வந்தது. இந்த ஆண்டு 2 ஆயிரம் டி.டி.எஸ் தண்ணீர் வந்து கொண்டுள்ளது. இது காலப் போக்கில் குறைய 500 டி.டி.எஸ் குறைய வாய்ப்புள்ளது. வரும் காலங்களில் ஈரோடு மாவட்டத்தில் பாசன பரப்பு குறைந்துள்ளதால், அந்த கீழ் பவானி பாசன கழிவு நீரை நமது மாவட்டத்திற்கு கொடுக்க முதல்வரிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடமும், நீதிமன்றத்திலும் 107 கோடி ரூபாய் வட்டியுடன் உள்ளது. இதில் 17 கோடி ரூபாய் ரிசர்வ் செய்து வைக்கப்பட்டுள்ளது.

இதில் 45 கோடி ரூபாய் கரூர் மாவட்டத்தில் உள்ள நொய்யல் ஆற்று பாசன விவசாயிகளுக்கு கிடைக்க உள்ளது. உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட பின்பும் விவசாயிகளை ஏமாற்றிக் கொண்டு இருக்கிறார்கள். நீதிமன்ற செலவுகளை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். இழப்பீட்டுத் தொகையை நாங்கள் பெற்றுத் தருகிறோம். நிவாரண தொகையை பெற்று தர முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது. முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று நிவாரண தொகை பெற்றுத் தர நடவடிக்கை எடுக்கப்படும். உச்சநீதிமன்றத்தில் உள்ள இழப்பீட்டு தொகை உயர்நீதிமன்றம் மூலமாக பெற நடவடிக்கை எடுக்கப்படும்.

தொடர்ந்து நொய்யல் ஆற்றில் நல்ல தண்ணீர் கொண்டு வந்து விவசாயத்திற்கு பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். காவிரி ஆற்றின் குறுக்கே புகழூரில் 250 கோடி மதிப்பீட்டில் கதவணை கட்ட கோரிக்கையை நானும், மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணியும் முதல்வரை சந்தித்து கோரிக்கை வைத்தோம். திட்டமதிப்பு தயாரிக்கப்பட்டு 403 மதிப்பீட்டில் கதவணை கட்டப்பட உள்ளது. அவற்றை முதல்வர் அடுத்த வாரம் துவக்கி வைக்க உள்ளார். கரூர் மாவட்டம், நாமக்கல் மாவட்டத்தில் விவசாய தேவைக்கும், குடிநீர் பிரச்சினைக்கும் தீர்வு கிடைக்கும் என்றார். நானும், முன்னாள் நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பித்துரையும் சேர்ந்து 8 இடங்களில் தேசிய நெடுஞ்சாலையில் விபத்து ஏற்படும் பகுதிகளில் மேம்பாலம் அமைக்க மத்திய அரசிடம் கோரிக்கைகள் வைத்தோம்,

அதன் அடிப்படையில் தற்போது 4 மேம்பாலங்கள் கட்ட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.நான் டெல்லி சென்ற போதெல்லாம் மத்திய அமைச்சரை சந்தித்து பாலத்திற்கு அனுமதி வாங்கியுள்ளோம். அதை பொறுத்துக் கொள்ள முடியாமல் செய்தியாளர்களிடம் தான் கொண்டு வந்ததாக எம்.பி பேட்டி கொடுக்கிறார். யார் கொண்டு வந்தார்கள் என்பது மக்களுக்குத் தெரியும் என்றார். திமுகவிற்கும், காங்கிரஸ் கட்சியினருக்கும் என்ன செய்தேன் சொல்ல தேவையில்லை, முதல்வருக்கும், மக்களுக்கும் நான் என்ன செய்தேன் என்பது தெரியும் என்றார்.

Views: - 27

0

0