கொலை குற்றவாளிகளுக்கு அடைக்கலம் கொடுத்தவர் செந்தில் பாலாஜி: ஜான்பாண்டியன் பேட்டி

Author: Udayaraman
10 October 2020, 10:58 pm
Quick Share

கரூர்: கரூரில் பட்டப்பகலில் இளநீர் கடை வியாபாரியை கொலை செய்த குற்றவாளிகள் செந்தில் பாலாஜியின் அடைக்கலத்தில் இருந்துள்ளதாக தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் நிறுவனத்தலைவர் ஜான்பாண்டியன் கூறியுள்ளார்.

தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் நிறுவனத்தலைவர் ஜான்பாண்டியன் கரூருக்கு வருகை தந்தார். அப்போது, கடந்த சில வாரங்களுக்கு முன்னர் கரூர் கோவை சாலையில் இளநீர் கடை வியாபாரி கிருஷ்ணமூர்த்தி என்பவர் ஒரு கும்பலால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழக அளவில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியது. இந்நிலையில் அவர் தேவேந்திர குல வேளாளர் சமூகத்தினை சார்ந்த நிலையில் அவரது வீட்டிற்கு நேரில் சென்று அவரும் அவரது மனைவியும், அக்கட்சியின் மாநில பொதுச்செயலாளர் வழக்கறிஞர் திருமதி. பிரிசில்லா பாண்டியன் ஆகியோர் பலியான கிருஷ்ணமூர்த்தியின் குடும்பத்திற்கு ரூ 1 லட்சம் பணத்தினை ஆறுதல் நிதியாக கொடுத்து ஆறுதல் கூறினர்.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த ஜான்பாண்டியன் பேசியதாவது:- தேவேந்திர குல சமூகத்தினை சார்ந்த கிருஷ்ணமூர்த்தி என்கின்ற இளைஞர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அவரது மனைவியின் முன்னிலையில் கொலை செய்யப்பட்டார். இந்நிலையில் அவரது கொலை திட்டமிட்டு நடைபெற்றதா ? என்று விசாரணை நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் உண்மையான குற்றவாளிகளை கைது செய்வோம் என்று உத்திரவாதம் அளித்த நிலையில் அவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அதற்கு காவல்துறைக்கு நன்றிகளை தெரிவித்து கொள்கின்றோம். ஆனால், கொலை செய்யப்பட்ட கிருஷ்ணமூர்த்தியின் கொலையை வைத்தும், அந்த கொலையில் கைது செய்யப்பட்டவர்களை வைத்தும் அரசியல் செய்பவர்களுக்கு கண்டனம் தெரிவித்த ஜான்பாண்டியன், அந்த கொலையில் எஸ்.சி – எஸ்.டி சட்டம் போடப்பட்டுள்ளது.

அதற்காக தமிழக அரசிற்கும், காவல்துறைக்கும் நன்றியினை தெரிவித்து கொண்டார். இந்நிலையில், இவர் நேற்றே இந்த கொலையில் ஈடுபட்டவர்களை கைது செய்தவர்களுக்கு ஆதரவாக உண்ணாவிரதம் இருந்த தி.மு.க கட்சி கரூர் மாவட்ட பொறுப்பாளர் செந்தில் பாலாஜிக்கு கண்டனம் தெரிவித்து டுவிட்டர் பதிவு போடப்பட்டிருந்த நிலையில், இன்று தேவேந்திர குல வேளாளர்களின் அரணே என்றும் ஒரு போஸ்டர் அச்சிடப்பட்டு அந்த போஸ்டரில் தியாகி இமானுவேல் சேகரனார் புகைப்படத்தினை அச்சிட்டு அந்த போஸ்டர்கள் இன்று காலை முதல் சர்ச்சைக்கு ஆளான நிலையில் அது குறித்து செய்தியாளர்கள் ஜான்பாண்டியன் அவர்களிடம் கேட்ட போது., செந்தில் பாலாஜியை என்னை விட கரூர் மாவட்ட மக்களுக்கு நன்கு தெரியும் என்றும், அவர் எத்தனை கட்சிகளுக்கு சென்றவர்,

மேலும் எத்தனை கட்சிகளுக்கு செல்ல உள்ளார் என்றும், ஆகவே மக்களை வைத்து பிழைப்பு நடத்துபவர்கள் இப்படி தான் செய்வார்கள் என்றார். செந்தில் பாலாஜி எத்தனை நாள் தியாகி இமானுவேல் சேகரன் கல்லறைக்கு சென்றார். என்பதை அவரால் சொல்ல முடியுமா? இதையெல்லாம் வைத்து பார்த்தால் அவர் அரசியல் செய்கின்றார். அதற்கு எங்கள் குல மக்கள் தான் கிடைத்தார்களா ? , மேலும், ஒரு விஷயம் கேள்விப்பட்டேன், கொலை செய்யப்பட்ட குற்றவாளிகளின் சகோதரர்கள், செந்தில் பாலாஜியின் அடைக்கலத்தில் தான் இருந்துள்ளனர். அப்போது செந்தில் பாலாஜியின் மூலமாக தான், இந்த கொலை நடந்திருக்குமோ என்கின்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஆகவே காவல்துறையினர் மேலும் தீவிர விசாரணை நடத்த வேண்டுமென்றும் கோரிக்கை விடுத்தார்.

Views: - 38

0

0